கோவை : ''தமிழகத்தில், ஒவ்வொருவரிடமும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும்,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு பேசினார்.
ஈஷா சார்பில், 'உயிர் நோக்கம்' என்ற 'ஆன்-லைன்' வழி இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது; மாநிலம் முழுவதும், 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிறைவாக, 'ஆனந்த சங்கமம்' நிகழ்ச்சி நடந்தது; மக்களின் கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.
ஒருவர், 'எனக்கு தெரிந்தவரை, இந்திய குருமார்களில் யாருமே பொருளாதாரம் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் உங்கள் அளவுக்கு பேசியதில்லை. இரு விஷயங்களுக்கு நீங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்' என, கேட்டார்

.அதற்கு, சத்குரு அளித்த பதில்: நம் நாடு, பொருளாதார வளர்ச்சி அடையும் நோக்கத்தில், பெரிதும் சுற்றுச்சூழல் அழிவுக்கு உள்ளாகி உள்ளது. உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில், 33 சதவீதத்தினர் நம் நாட்டில் உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம், மண்ணில் தேவையான சத்து இல்லை. குறைந்தபட்சம், 2 சதவீதம் கரிம வளம் இருந்தால் மட்டுமே, மண் என்றே சொல்ல முடியும் என்கிறது ஐ.நா., அமைப்பு.
நம் நாட்டு மண்ணில், சராசரி கரிம வள அளவு வெறும், 0.68 சதவீதம். இந்நிலை நீடித்தால், அடுத்த, 30 ஆண்டுகளில் விவசாயமே செய்ய முடியாது. மண் வளம் இருந்தால் மட்டுமே சத்தான உணவு கிடைக்கும். ஊட்டச்சத்து மிக்க உணவின்றி தவிக்கும் மக்களிடம், ஆன்மிகம் பேசுவது அசிங்கம். அதை ஒருபோதும் செய்யமாட்டேன். அதனால், சுற்றுச்சூழல் குறித்து அதிகம் பேசுகிறேன்.
தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மிகத்தையாவது சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக, உயிர் நோக்கம், சூரிய சக்தி போன்ற யோகா பயிற்சிகளை, இலவசமாக சேர்ப்பிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.இவ்வாறு, சத்குரு பதிலளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE