கோவை : கோவை நகரில் விபச்சார கும்பலை பிடிக்க, சந்தேகத்துக்குரிய காரை சுற்றிவளைத்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணாடிகள் ஏற்றப்பட்ட காருக்குள் அரை நிர்வாண கோலத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியரும், மாணவியும் பிடிபட்டனர். நேற்று மதியம் 1.30 மணியளவில் வடகோவை மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்துக்கிடமான வகையில் நீண்ட நேரமாக நின்றிருந்த காரை, போலீசார் திடீர் சோதனையிட முயன்றனர். கார் கண்ணாடிகள் அனைத்தும் ஏற்றப்பட்ட நிலையில், உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்க தாமதித்தனர். போலீசார் சுற்றி வளைத்திருப்பதை கண்டு ஆடிப்போன ஜோடி, 15 நிமிடத்துக்குப்பின் கதவை திறந்தது. ஆசிரியர் - மாணவி: பிடிபட்ட இளைஞர் உத்ராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்சி., எம்.எட்., பட்டப்படிப்பை முடித்தபின், கடந்த ஆண்டில் கோவை வந்துள்ளார். வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில், தகுதித் தேர்வு நடத்தும் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உடனிருந்த மாணவி வெளியூரைச் சேர்ந்தவர். எம்.ஏ., முடித்த இவர், கோவையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி, வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மதிய உணவு இடைவேளையின்போது நிறுவனத்திலிருந்து காரில் வெளியேறிய இருவரும், பட்டப்பகலில் வடகோவை மேம்பாலத்தின் கீழ், ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் காரை நிறுத்தி, அரை நிர்வாண கோலத்தில் "சில்மிஷத்தில்' ஈடுபட்டுள்ளனர். போலீசார் முன் கதறியழுத ஜோடி, தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். உயரதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, கடுமையாக எச்சரித்து காட்டூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.