திருநெல்வேலி:மத்திய அரசு கொண்டுவரும் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக, தமிழக முதல்வருடன் இணைந்து, தமிழகத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என, வைகோ தெரிவித்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடும் என்றார்.நெல்லையில், ம.தி.மு.க., சார்பில், செப்., 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கட்சி பொதுச் செயலர் வைகோ தலைமை வகித்தார். ஆலோசனைக்கு பின், வைகோ கூறியதாவது:கடந்த, 1994ல் நடந்த எழுச்சி பேரணியை போல, 1995 மாநில மாநாடு போல, நெல்லையில் நடக்க உள்ள மாநாடும், ம.தி.மு.க.,விற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தர உள்ளது.மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது, இந்திய ஒருமைப்பாட்டிற்கு ÷
வட்டுவைக்கக் கூடியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளை பராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
அத்தகைய சட்டங்களுக்கு எதிராக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக, கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு, வலுவூட்டும் வகையில், டில்லியில் மத்திய பணியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளனர்.இதை எதிர்த்து, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும். இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க.,போட்டியிடும். சமச்சீர் கல்வி விஷயத்தில் தமிழக அரசின் கொள்கை மிக மிக தவறானது. ஒரு தலைமுறையை பாழாக்கக் கூடியதாக உள்ளது.இவ்வாறு வைகோ கூறினார் .