இஸ்லாமாபாத்: அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவில்மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பாகிஸ்தானில் அல்குவைதா இயக்கத் தலைவர் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையேயான உறவில்விரிசல் ஏற்பட துவங்கியது. பாகிஸ்தானிற்கு தெரிவிக்காமல் அமெரிக்கா மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபட்டது. இது பாகிஸ்தானியர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இதனையடுத்து அமெரிக்க மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் விசயங்களில் அதிக கெடுபிடிகள் மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளை பாகிஸ்தான் நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த அதிகாரியான கேமரான் முண்டர் என்பவர் காராச்சிக்கு சென்றிருந்தார். ஆனால் அவர் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எதுவும் வைத்திருக்க வில்லை.இதனால் அவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டார். தூதரக அதிகாரியான தன்னிடம் விசாரணை நடத்துவது கண்டனத்திற்குரியது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக டான்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.