புதுச்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் அடிக்கடி பழுதடைவதால்
பத்திரப் பதிவு பணிகள் முடங்குவது தொடர்கதையாக மாறி விட்டது.சாரம் கலெக்டர்
அலுவலகம் அருகில், மாவட்ட பதிவாளர் அலுவலகமும், புதுச்சேரி சார் பதிவாளர்
அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
சார் பதிவாளர் அலுவலகத்தில், புதுச்சேரி
நகரம் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலம்
வாங்குவது, விற்பது தொடர்பான பத்திரப் பதிவுகள் நடந்து வருகிறது.சார்
பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மென்பொருளில் கடந்த மாதம் 15ம்
தேதி கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு வார காலத்திற்கு பத்திரப் பதிவு
பணிகள் முற்றிலுமாக முடங்கின. சென்னையிலிருந்து கம்ப்யூட்டர் வல்லுனர்கள்
வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது.இந்நிலையில், கடந்த 1ம் தேதியும்
கம்ப்யூட்டர் மென்பொருளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டு பத்திரப் பதிவு
பாதிக்கப்பட்டது. பத்திரம் பதிய வந்த பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர். பல மணி நேரத்துக்கு பின், கோளாறு சரி செய்யப்பட்டு
மீண்டும் பத்திரப் பதிவு பணி துவங்கியது. கம்ப்யூட்டர் அடிக்கடி
பழுதடைவதாலும், நிலத்துக்கு மார்க்கெட் மதிப்பு நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட
காலதாமதத்தாலும் கடந்த மார்ச் மாதம் முதல் 1000க்கும் மேற்பட்ட
பத்திரங்கள் பதியப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார் பதிவாளர் அலுவலகத்தில், தினசரி 80க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு
செய்வதற்காக வருகின்றன. கம்ப்யூட்டர் அடிக்கடி காலை வாருவதால், ஊழியர்கள்
கைப்பட எழுதி பதிவு செய்கின்றனர். இதனால், பல பத்திரங்கள் பதியப்படாமல்
நிலுவையில் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மற்ற சார் பதிவாளர்
அலுவலகங்களில் பதிவு செய்த ஓரிரண்டு தினங்களில் பத்திரங்கள்
வழங்கப்படுகின்றன. ஆனால், சாரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில்
மட்டும் குறைந்தபட்சம் 20 நாள்களுக்குப் பிறகே பத்திரங்கள் திருப்பி
வழங்கப்படுகின்றன. தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை,
தொழில்நுட்ப கோளாறு போன்றவையே இதற்கு முக்கிய காரணமாகும். காலத்திற்கேற்ற
நவீன சாப்ட்வேர்களை புகுத்தாமல், பழைய சாப்ட்வேர்களையே
பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ஆவணங்களைச் சேமிக்க முடியாமல்,
சாப்ட்வேர்கள் முடங்கி போய் விடுகின்றன.பயிற்சி இல்லாத தொழில்நுட்ப
பணியாளர்களைக் கொண்டு ஆவணங்களை எடுப்பதாலும் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு
தலைதூக்குகிறது. புதுச்சேரி அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் பிரதான
துறைகளில் ஒன்றாக விளங்கும் பத்திரப் பதிவுத் துறையில், கம்ப்யூட்டர்கள்
அடிக்கடி பழுதடையும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE