கோல்கட்டா-''இன்னும் 10 ஆண்டுகளில் பயணியர் விமான போக்குவரத்து துறையில் நம் நாடு முதலாவது இடத்தை எட்டிப் பிடிக்கும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய வர்த்தக சபை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் பேசியதாவது:கடந்த 70 ஆண்டுகளில் நம் நாட்டில் 74 புதிய விமான நிலையங்கள் தான் திறக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் 62 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டன.
இதையடுத்து நம் நாட்டில் மொத்தம் 136 விமான நிலையங்கள் உள்ளன. இதை 2025க்குள் 220 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 - 19 காலகட்டத்தில் பயணியர் விமான போக்குவரத்தில் நாம் அபார வளர்ச்சி அடைந்துள்ளோம். விமான பயணியரின் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் இருந்த நாம் நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். இன்னும் 10 ஆண்டுகளில் முதலாவது இடத்தை நாம் எட்டி பிடிப்போம். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விமான பயணியரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக இந்த வளர்ச்சி சாத்தியப்படும்.அனைத்து 'மெட்ரோ' நகரங்களிலும், இரண்டாவது விமான நிலையம் திறக்க வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

விமான சேவை சீராகும்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து சேவை தற்போது படிப்படியாக சீராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், சர்வதேச பயணியர் விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக சீராகும் என எதிர்பார்க்கிறோம்.
ராஜிவ் பன்சால்செயலர், விமான போக்குவரத்து துறை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE