பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வியூகங்கள் குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ல் துவங்கி, அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா தலைமையில் டில்லியில் இன்று நடைபெற உள்ளது
. குளிர்கால கூட்டத்தொடரை சந்திக்கும் வழிமுறைகள், அரசுக்கு எதிரான வியூங்கள், இரு சபைகளிலும் நெருக்கடி தருவது தொடர்பான செயல்திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முக்கிய பிரச்னைகளில் ஐ.மு., கூட்டணியில் உள்ள தி.மு.க., தேசியவாத காங்., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என தெரிகிறது.
முந்தைய கூட்டத்தொடர்களில் வேளாண் சட்டங்கள் மற்றும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரங்களை வைத்து, காங்., மற்றும் தோழமை கட்சிகள் இரு சபைகளையும் முடக்கி இருந்தன. இப்போது இந்த இரு பிரச்னைகளும் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்து உள்ளன. எனவே சீன ஊடுருவல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கலாம்.

உ.பி., சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அம்மாநிலத்தின் லக்கிம்பூரில் விவசாயிகள் கார் மோதி பலியான பிரச்னையையும், காங்., இரு சபைகளிலும் கிளப்பும் என தெரிகிறது. இதனால் இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இல்லத்தில், 28ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. விருந்துடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என ராஜ்யசபா கட்சி தலைவர்களுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துஉள்ளார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE