சென்னை : ""திருமங்கலம் தொகுதி டி.கல்லுபட்டியில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்,'' என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் கேள்விநேரத்தின் போது, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது: திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டயைச் சுற்றி 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வத்திராயிருப்பு, கள்ளிகுடி, மயிலாடும்பாறை மற்றும் உசிலம்பட்டி ஆகிய நான்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வாகனங்களைக் கொண்டே இப்பகுதியில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மீட்புப் பணி அழைப்புகளை மேற்கொள்ள இயலும். டி.கல்லுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் குடிசை வீடுகள் உள்ளன. இந்த காரணத்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலைகள் நல்ல நிலையில் இல்லாததால், தீயணைப்பு வண்டிகள் விரைந்து செல்ல இயலாத காரணத்தாலும், டி.கல்லுப்பட்டியில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும். இப்புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு, ஒரு நீர் தாங்கி வண்டி வழங்கப்படும். அவ்வாறு, ஒரு நீர் தாங்கி வண்டியை அதற்குரிய உபகரணங்களுடன் வாங்க 25 லட்சம் ரூபாயும், தளவாடங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 26 லட்சம் ரூபாய் தொடரா செலவினமாக அனுமதிக்கப்படும். இந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு ஒரு தீயணைப்பு அலுவலர், 2 முன்னணி தீயணைப்போர்கள், ஒரு இயந்திர கம்மியர் ஒட்டி அதாவது டிரைவர் மெக்கானிக், 2 தீயணைப்போர் டிரைவர்கள் மற்றும் 11 தீயணைப்போர்கள் ஆகிய பணியாளர்கள் ஒப்பளிப்பு செய்ய, மற்றும் கட்டட வாடகை ஆகியவற்றுக்கு தொடர் செலவினமாக ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாயும் அனுமதிக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE