சென்னை : ""எம்.எல்.ஏ.,க்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் முகவரி (இ-மெயில்) வழங்கியது போல, அதை படிப்பதற்கு வசதியாக மடிக்கணினிகளையும் (லேப்-டாப்) வழங்க வேண்டும்,'' என்று தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாபு முருகவேல் கோரிக்கை வைத்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பாபு முருகவேல் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற உடனே, கைவிலங்கை உடைத்து காற்றில் கலந்துவிட்டதைப் போன்ற உணர்வு, மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. அதன் வெளிப்பாடாக, அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டவர்கள் தற்காலிகமாக சிறையின் சொத்தாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் நீதித் துறைக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கியதாகக் கூறினர். ஆனால், அதை அவர்கள் முறையாக செலவிட்டனரா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இந்த பட்ஜெட்டில் கூறியுள்ள 252 கோடி ரூபாயை நல்ல முறையில் செலவிட வேண்டும். குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி, அதனால் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் ஓட்டுனரின் உரிமத்தை உடனே ரத்து செய்வதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். நகர் ஊரமைப்பு இயக்குனரக அனுமதி பெறாத வீட்டுமனைகளுக்கு எந்த அடிப்படை வசதியும் தராமல், குறைந்தது 1,200 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளில் கட்டாயம் ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு விசைப்படகிலும், ஒரு செயற்கைக்கோள் மொபைல் போன் இலவசமாக தந்து, மீனவர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும். புவி வெப்பமயமாதலை தடுக்க, அனைத்து வீடுகளுக்கும் நான்கு சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க வேண்டும். அரசு மகளிர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச சானிட்டரி நேப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவி, மாணவியர் நலன் காக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை தகவல்களை தெரிந்து கொள்ள, மின்னஞ்சல் முகவரி வழங்கியுள்ளீர்கள். மின்னஞ்சல்களை படிக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு லேப்-டாப்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பாபு முருகவேல் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE