அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு: கல்வி மானியத்தின் போது வெளியிடப்படும்

Added : ஆக 11, 2011
Advertisement

சென்னை : ""பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு, கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்படும்,'' என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். பட்ஜெட் மீது சட்டசபையில் நடந்த விவாதம்: ராமமூர்த்தி - மார்க்சிஸ்ட்: கலர் "டிவி' கொடுத்து மக்கள் கதையை முடிக்க கருணாநிதி நினைத்தார். ஆனால், அவர்கள் கொடுத்த கலர் "டிவி'யே அவர்களது கதையை முடித்துவிட்டது. அ.தி.மு.க., அரசு மாடுகள் வழங்குவதால், தமிழகம் முழுவதும் லட்சுமி, சரஸ்வதிகள் உலா வரப் போகின்றன. தமிழக கிராமங்களில், மாடுகளை வாழும் தெய்வமாக பார்க்கின்றனர். அப்படியானால், அந்த லட்சுமியைக் கொடுத்த லட்சுமியை எப்படி பார்ப்பர். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவது, மிகப் பெரிய சமூக பிரச்னையாகும். தமிழ் மணப்பெண் கிடைப்பது குறைந்துவிடும். தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழைகளுக்கு, ரேஷன் கார்டு உட்பட அனைத்து அடையாள ஆவணங்களும் உள்ளன. ஆனால், பட்டா இல்லாதது வருத்தமளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வர வேண்டும். வெற்றிவேல் - அ.தி.மு.க: தமிழகத்தில் பெண் குழந்தைகள் கணக்கெடுப்பில், 1,000க்கு 950 என்ற விகிதம் உள்ளது. மற்ற மாநிலங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைவாக இருந்தது. இதற்கு தொட்டில் குழந்தைகள் திட்டமே காரணம். குரு என்ற குருநாதன் - பா.ம.க: தனியாருக்கு தாரை வார்க்கும் நில வங்கி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டுமென, ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். தமிழக அரசு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: தனி பட்ஜெட் தேவையில்லை. தற்போதைய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்றினாலே, உலக வரலாற்றில் தமிழகம் முதலிடத்தைப் பெறும். குரு: ஆசிரியர் நியமனம் பற்றிய அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே எடுக்க வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 1.80 லட்சம் ரூபாயும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் தருவது மக்களை பிரிவுபடுத்துவதாகும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி, தமிழ் ஈழம் அமைக்கப்படுமென முதல்வர் முன்பு கூறியிருந்தார். அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் முனுசாமி: பசுமை குடியிருப்பு திட்டத்தில் 300 சதுர அடியில் வீடு கட்ட, 1.80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 200 சதுர அடியில் வீடு கட்ட, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டமான இதில், 33 ஆயிரம் ரூபாயைத் தான் மத்திய அரசு வழங்குகிறது. மீதம் 66 ஆயிரம் ரூபாயை சேர்த்து 1 லட்சமாக தமிழக அரசு வழங்குகிறது. ஒரு வீடு கட்ட சதுர அடிக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் நிதி வழங்கப்படுகிறது. அமைச்சர் சி.வி.சண்முகம்: புதிய திட்டத்தை அறிவித்தால் பட்ஜெட் உரையில் இடம் பெறும். ஆசிரியர் நியமனம் என்பது ஆண்டுதோறும் நடந்து வருவது. எனவே, அது பற்றிய அறிவிப்பு, கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்படும். கடந்த ஆட்சியில், ஆசிரியர் பணிக்கு 400 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டனர். அது பற்றி முழு ஆய்வு செய்யப்பட்டது. தற்போது 47 பேர் விடுபட்டிருப்பதாகக் கூறி கோர்ட்டுக்கு சென்றனர். இவை பற்றி ஆய்வு செய்து, ஆசிரியர் நியமனம் பற்றிய அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையின் மானியத்தின் போது வெளியிடப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X