ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE