வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 17 மாதங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலை, 300 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், 425 ரூபாயாக இருந்த சமையல் காஸ் விலை, இப்போது, 1,015 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது, உண்மையில் கொடுமையிலும் பெரிய கொடுமை இது.
இந்த விலை உயர்வுக்கு, ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே நடக்கும் போர் தான் காரணம் என்கின்றன, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள். 'காஸ் விலை உயர்வு தவிர்க்க முடியாதது; வரிகளை உயர்த்தாமல், ஆட்சி செய்ய முடியாது' என்கிறார், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. அவருக்கு இருக்கும் வசதிக்கு, இந்த விலை உயர்வு அற்பமாகத் தெரிவதில் வியப்பில்லை.
'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா... இவன் ரொம்ப நல்லவன்டா...' என, காமெடி நடிகர் வடிவேலு சொன்ன, 'டயலாக்' தான், இப்போது நம் நினைவுக்கு வருகிறது. என்ன தான் மக்கள் கண்ணீர் விட்டு கதறினாலும், அழுது புரண்டாலும், சமையல் காஸ் விலை குறைய வாய்ப்பே இல்லை. கொடிய கொரோனாவை எதிர்கொண்டு வாழப் பழகிய நம் இந்திய மக்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும், அதற்காக விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட முன்வர மாட்டார்கள். இது, ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், சமையல் காஸ் விலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். தங்கம் விலை சவரனுக்கு, 40 ஆயிரம் ரூபாயை எட்டினாலும், மக்கள் அக் ஷய த்ருதியை அன்று நகைக் கடைகளுக்கு கூட்டம் கூட்டமாகச் சென்று நகைகள் வாங்குவதை தான் நாம் பார்க்கிறோமே. இப்போது வீடு கட்ட, பல லட்சங்கள் செலவாகிறது என்பதற்காக, யாரும் வீடு கட்டாமல் இருக்கின்றனரா என்ன?
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது என்பதற்காக, மக்கள் கார், பைக்கில் பயணிக்காமல், பஸ்சில் பயணிக்கின்றனரா என்ன? திருமணம் செய்து கொண்டால், அய்யோ... மனைவியின், 'டார்ச்சரை' தாங்க வேண்டுமே என்று பயந்து, யாரும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனரா என்ன? இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து, வெகு நாட்களாகி விட்டன.
இது தெரியாமல், இங்கு உள்ள அரசியல் வியாபாரிகள், மத்திய அரசை கண்டித்து அறிக்கை விடுவதும், போராட்டம் நடத்துவதும், பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத வெட்டி வேலை என்று ஒதுக்கித் தள்ளுவதை தவிர வேறு வழியில்லை. 'நினைக்கத் தெரிந்த மனமே... உனக்கு மறக்கத் தெரியாதா...' என்ற, கவியரசு கண்ணதாசனின் பாடலை நினைவில் கொண்டு, காஸ் சிலிண்டர் விலை உயர்வை மறந்து விடுங்கள் அருமை மக்களே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE