டோக்கியோ : ஜப்பானின் புதிய பிரதமராக, அந்நாட்டு நிதியமைச்சர் யோஷிஹிக்கோ நோடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில், ஆறாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர், நாட்டின் மிக முக்கிய மூன்று பிரச்னைகளுக்கு, உடனடித் தீர்வு காண வேண்டிய சூழலில் உள்ளார்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின் நிலையக் கதிர்வீச்சு ஆகிய பேரிடர்களை, அப்போதைய பிரதமர் நவோட்டோ கான் சரியாகக் கையாளவில்லை என, மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.
இதையடுத்து கடந்த, 26ம் தேதி, கான் தன் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஆளும், ஜப்பான் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் யோஷிஹிக்கோ நோடா, வெளியுறவு அமைச்சர் பான்ரி காய்எடா உள்ளிட்ட ஐந்து பேர், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். பிரதமரைத் தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு, நேற்று தலைநகர் டோக்கியோவில் உள்ள ஆளும் கட்சி வளாகத்தில் நடந்தது.
முதல் சுற்றில், நோடா மற்றும் வெளியுறவு அமைச்சர் காய்எடா இருவரில் யார் பெரும்பான்மை பெற்றனர் என்பது தெளிவாகவில்லை. இரண்டாவது சுற்று ஓட்டெடுப்பில், நோடாவுக்கு, 215 வாக்குகளும், காய்எடாவுக்கு, 177 வாக்குகளும் விழுந்தன. இதையடுத்து நோடா பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய நிலையில், சுனாமி பாதிப்பில் இருந்து மீட்சி, கதிர்வீச்சு அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வருதல், ஜப்பான் கரன்சி "யென்'னை வலுப்படுத்தல் ஆகிய மூன்று பிரதான சவால்கள் நாட்டை எதிர்நோக்கியுள்ளன' என்றார்.
கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்து பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்ததால், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதோடு, பொதுக் கடன் அதிகரிப்பு, "யென்' வலுவிழப்பு போன்ற சிக்கல்கள் தான் அதிகரித்தன. இந்நிலையில், புதிய பிரதமரின் தேர்வு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE