வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குன்னுார் : ''நாட்டின் சக்தியாக விளங்கும் இளைஞர்கள், 'அக்னிபத்' திட்டத்தில் ராணுவத்தில் இணைய வேண்டும்,'' என, முன்னாள் கமாண்டன்ட் பிரிகேடியர் சுரேஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டம் குறித்து, நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் முன்னாள் கமாண்டன்ட் பிரிகேடியர் சுரேஷ் குமார் கூறியதாவது: 'அக்னிபத்' திட்டத்துக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் அமைக்கப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, கேபினட் கமிட்டி, முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்ற பிறகு தான், திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ராணுவ தேர்வுகளில், 100 பேர் வந்தால், 25 சதவீதம் பேர் தான் தேர்வு செய்யப்படுவர். 'அக்னிபத்' திட்டத்தில்,தகுதியான அனைவரும்தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு, அவர்களுக்கு பணி வழங்கப்படும். அதில், 25 சதவீதம் பேர் பணியை தொடருவர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வரும், 75 சதவீதம் பேருக்கு, ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன.

இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரியும் நான்கு ஆண்டுகளில், நாட்டுக்கும், தனது வாழ்க்கைக்கும் தேவையான பயிற்சியை பெற்று விடுவதுடன், 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். ராணுவத்தில், கம்ப்யூட்டர், டிரைவிங், சிறந்த உடற்பயிற்சி உள்ளிட்ட பலதரப்பட்ட பயிற்சிகளை பெறும் நிலையில், எதில் தனக்கு திறமை உள்ளதோ அதற்கேற்ற பணிகளுக்கு, தனது 25வது வயதிலேயே செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அரசியல் மற்றும் பிற காரணங்களால் இந்த திட்டம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை இளைஞர்கள் நம்ப வேண்டாம். நம் நாட்டின் சக்தியாக விளங்கும் இளைஞர்கள், 'அக்னிபத்' திட்டத்தில் சேர உடனே விண்ணப்பித்து எதிர்காலத்தை சிறப்பாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.