பொது செய்தி

தமிழ்நாடு

வைகை வெள்ளத்தில் வளமான கிருதுமால் நதி

Added : செப் 04, 2011 | கருத்துகள் (1)
Advertisement

தென் பகுதியின் பெரும் நீராதாரமாக இருந்து வரும் வைகையால் பயன்பெற்ற கண்மாய்கள் பல இருப்பது போல், கிருதுமால் நதியும் சில ஆண்டுகளுக்கு முன் வரை, வைகையின் செழிப்பில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை விளைவித்து விவசாயிகளின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியது. வைகையின் கிளை ஆறுகள் அனைத்தும் உயிருடன் (நீரோட்டத்துடன்) உள்ளன. ஆனால் உயிரற்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பரிதாப கிளை ஆறு கிருதுமால் நதி. இது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குண்டாற்றின் உபநதி என அழைக்கப்பட்டாலும், இந்நதி வைகை ஆற்றுத் தண்ணீரை பெற்று பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பசுமையாக வைத்திருந்தது; 74 கண்மாய்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளன.
வைகை ஆற்றுத் தண்ணீர் தான் கிருதுமால் நதியிலும் வந்தது, என விவசாயிகள் அறுதியிட்டு கூறி வரும் நிலையில், வைகைக்கும், கிருமால் நதிக்கும் தொடர்பு இல்லை என, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து வருகிறது பொதுப்
பணித்துறை. ஆனால் கிருதுமால் நதி, வைகை தண்ணீரை பெற்று வந்தது. "கிருது மாலை' அல்லது "கிருதுமால்' என அழைக்கப்படும் இந்நதி மதுரையின் மேற்கு பகுதியில் உள்ள நாகமலையில் இருந்து உற்பத்தியானதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாகமலையின் அடிவாரத்தில் புல்லூத்து, நாகதீர்த்தம், காக்கா ஊத்து போன்ற நீரூற்றுகள் இன்றளவும் உள்ளன. மதுரை நகர் பகுதி வழியாக ஓடும் இந்நதி மதுரை நகருக்கு வெளியே, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா வழியாக குண்டாற்றில் கலந்து,
மலட்டாறு என்ற பெயரில் வங்கக் கடலில் கலக்கிறது.நாகமலை அடிவாரத்தில் பிறந்த கிருதுமால் நதியை அப்பகுதியில் இன்று தேடினாலும் கிடைப்பது இல்லை. அதற்கான சுவடுகள் இன்றி அழிந்துவிட்டன. துவரிமான் கண்மாயின் மறுகாலில் இருந்து தான் இப்போது அதன் உற்பத்தி இடம் என அறியப்படுகிறது. மாடக்குளம் கண்மாயின் மறுகாலில் இருந்து இது தன் பயணத்தை துவங்கி, பொன்மேனி, புதுஎல்லீஸ்நகர், திடீர்நகர், தெற்குவாசல், மாகாளிப்பட்டி, கீரைத்துறை என மதுரை நகரின் எல்லையை தாண்டி செல்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மதுரை நகரின் பெரிய சாக்கடை கால்வாயாக இந்நதி மாறியுள்ளது தான் மிகப்பெரிய அவலம். சாமநத்தத்தில் கிருமால் நதி இரண்டாக பிரிந்து ஒரு பிரிவு பொட்டபாளையம் கண்மாயை சென்றடைகிறது. மற்றொரு பிரிவு கொந்தகை கண்மாய் உபரி நீர்போக்கியை அடைந்து, அதன் உபரி தண்ணீருடன் கலந்து கிழக்கு நோக்கி குண்டாறு சென்றடைகிறது. கிருதுமால் நதியின் பிரதான ஆதாரம் உள்ளூர் மழை பொழிவு தான். வைகை அணை கட்டுவதற்கு முன் கிருமால் நதியிலும் தண்ணீர் வளம் நிறைந்திருந்துள்ளது. கொரம்புகள் அமைத்து வைகை தண்ணீரை கிருமால் நதிக்கு முன்னோர்கள் திருப்பியிருக்கிறார்கள் என கிராம மக்கள் உறுதிபட கூறுகின்றனர். ஆனால் வைகை ஆற்றினால் நேரடி பாசனம் பெற்ற மாடக்குளம், துவரிமான், அவனியாபுரம், சிந்தாமணி, அனுப்பானடி, பனையூர், கொந்தகை கால்வாய்கள் மற்றும் கண்மாய்களின் பாசன நிலங்களில் இருந்து வரும் வடிநீர் தான் கிருதுமால் நதியின் நீர் ஆதாரமாக உள்ளது, என பொதுப்பணித்துறை தெரிவிக்கிறது. வைகை ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளை அதிகம் நடந்ததால், ஆற்றுப்படுகைகளில் அரிப்பு ஏற்பட்டு, தாழ்வாக மாறிவிட்டதால் தான், கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை, இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது கிருதுமால் நதி பாசன பகுதி தான், என விவசாயிகள் புலம்புகின்றனர். விரகனூர் மதகு அணையின் கீழ் உள்ள வலது பிரதான காய்வாயிலிருந்து, ஒரு புதிய கால்வாய் கொந்தகை கண்மாய்க்கு அமைத்து வைகை தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வைகையில் வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் வந்தால் தான்,
இங்கு தண்ணீர் என்ற நிலை உள்ளது. இது 5 அல்லது 6 ஆண்டுக்கு ஒரு முறை தான் இந்த அளவு தண்ணீர் வரும். அப்போது தான் கிருதுமால் நதியில் தண்ணீர் என்ற நிலை உள்ளது. கிருதுமால் நதி 100 மீ., முதல் 150 மீ., அகலம் உடையது. தண்ணீர் இல்லாதால் இதன் பெரும் பகுதிகள் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளது. மதுரை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஓரளவு தப்பிய இந்நதி கான்கிரீட் ஆறாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்களுக்கும், விவசாயத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்த கிருதுமால் நதியையும், ஒரு வைகையாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.

நமது நீர்வளம் எப்படி? : இந்தியாவின் மொத்த நீர் வளம் (65,986 டி.எம்.சி.,). தமிழகத்தின் பங்கு (825 டி.எம்.சி.,) இது வெறும் 1.25 சதவீதம் மட்டுமே. தமிழகத்தின் மொத்த நீர் வளத்தில் வைகையின் பங்கு (55.70 டி.எம்.சி.,) இது 6.7 சதவீதம். வைகை மற்றும் அதன் துணை ஆறுகளால் பாசனம் பெறும் கண்மாய், குளங்களின் எண்ணிக்கை 1497. இவற்றின் கொள்ளளவு 410 எம்.சி.எம்., அணைகள் 5. இவற்றின் கொள்ளளவு 659 எம்.சி.எம்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - aruppukottai,இந்தியா
04-செப்-201101:49:04 IST Report Abuse
saravanan குண்டாறு & வேம்பாறு இரண்டையும் வைகையுடன் இணைத்து இந்த இரண்டு ஆறுகளிலும் பலஇடங்களில் அணைகளைக்கட்டி ஆவற்றுடன் கண்மாய்களை இணைத்து மழை நீரை தேக்கினால் தான் வறண்ட மாவட்டங்களான விருதுநகர் & ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் செழித்து மக்கள் நகரங்களை நோக்கி கிராமங்களிலிருந்து குடிபெயரும் அவலம் மாறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X