புதுடில்லி:டில்லி ஐகோர்ட்டின் ஐந்தாம் வாயிலில் நேற்று காலை 10.14 மணிக்கு, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், வழக்கு விசாரணைக்காக வந்திருந்த அப்பாவி பொதுமக்கள், 12 பேர் பலியாகினர்; 76 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை கூடும் என, அஞ்சப்படுகிறது.
நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளில் இருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காதா என, கோர்ட் படிக்கட்டுகளில் ஏறிய அப்பாவி பொதுமக்கள் பலர், பயங்கரவாதிகள் வைத்த குண்டுக்கு பலியாகியுள்ளனர் என்பது வேதனைக்குரியது. நான்கு மாதத்திற்கு முன், இதே வளாகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. அப்போது, பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால், இம்முறை 12 பேர் உயிரை பலிவாங்கி விட்டது.
கடந்த சில மாதங்களாக லஞ்ச ஊழல் வழக்குகள் விசாரணைக்காக, அல்லோகலபட்டுக் கொண்டிருந்த டில்லி ஐகோர்ட்டின் நடவடிக்கைகள், நேற்று காலை குண்டுவெடிப்புடன் தான் துவங்கின. டில்லி ஐகோர்ட்டில், ஐந்தாவது வாயில் தான், பிரதான நுழைவாயில். இதன் வழியாகத்தான், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஐகோர்ட்டிற்குள் செல்வர். பொதுமக்களும் இந்த வழியாகத்தான் வருவர். நேற்று புதன்கிழமை என்பதால், வழக்கத்தைவிட கூட்டம் அதிகம். ஐந்தாவது வாயிலில்தான் வரவேற்பு அறையும் உள்ளது.இங்குதான் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வரும் பொதுமக்கள், ஐகோர்ட்டிற்குள் செல்ல அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக நேற்று காலை 9 மணி முதலே , பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணியை தாண்டியதும் மக்கள் கூட்டத்தால், ஐகோர்ட்டின் நான்காவது மற்றும் ஐந்தாவது வாயில் இடைப்பட்ட பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
ஐகோர்ட்டிற்குள் கறுப்பு அங்கி அணிந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பணியாளர்களும் வந்து கொண்டிருந்தனர். மக்களில் பலர், அனுமதி கடிதம் வாங்குவதில் மும்முரமாக இருந்த போது, காலை 10.14 மணிக்கு, நான்காவது வாயில் மற்றும் ஐந்தாவது வாயிலுக்கு இடையே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. எங்கும் அலறல் சத்தம், அதிர்ச்சியில் மிரண்டு, பலரும் ஓடினர். அனுமதி கடிதம் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்து பலரும், குண்டுவெடிப்பில் சிக்கி, தூக்கி வீசப்பட்டனர். கோர்ட் வளாகத்தில் பலரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. சம்பவத்தை கேள்விப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அங்கு என்ன நடக்கிறது என்ற யூகிக்க முடியாத நிலையில், பலரும் தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். பலரின் உடைகளில் ரத்தக்கறை சிதறியிருந்ததை பார்க்க முடிந்தது. குண்டுவெடிப்பில் சிக்கி, 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிக் கிடந்தனர். இரண்டு பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்தனர். பலருக்கு கை, கால் மற்றும் இடும்பெலும்பில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஒன்றாக வந்திருந்தவர்கள் எல்லாம் நாலாபக்கமும் சிதறுண்டு கிடந்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று, அருகிலிருந்த ராம்லோகியா மருத்துவமனையிலும், எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும், 76 பேருக்கு மேல் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பு சம்பவத்தால், அதிர்ச்சிக்குள்ளான நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் செய்வதறியது திகைத்து நின்றனர். மதியம் வரை, கோர்ட் செயல்பட வில்லை. மதியத்திற்கு பிறகே கோர்ட் செயல்பட்டது. சம்பவ இடத்திற்கு, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் விரைந்து வந்து பார்வையிட்டனர். மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிக்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தேசிய புலனாய்வு விசாரணைதுவக்கம்:குண்டுவெடிப்பு குறித்த விசாரணையை, தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று துவக்கினர். இதற்காக, 20 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சூட்கேசில் வைக்கப்பட்ட வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கியிருக்கலாம் எனவும், குண்டில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், சூட்கேஸ் கொண்டுவந்தவர் குண்டுவெடிப்பில் சிக்கி, காயத்துடன் தப்பியிருக்கக் கூடும் என்பதால், காயம் அடைந்தவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவரின் புகைப்படத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்து, டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவத்திறகு பொறுப்பு ஏற்றுள்ள ஹர்கத் - அல் - ஜிகாதி அமைப்பு, அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டை குறிவைப்போம் என, மிரட்டல் விடுத்துள்ளதால், டில்லி நகரமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கு ஹர்கத் - அல் - ஜிகாதி பொறுப்பேற்பு:டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இது குறித்த தகவலை இ-மெயில் மூலம், "டிவி' சேனல் உட்பட மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த இ-மெயிலில்," அப்சல் குருவின் தூக்கு தண்டனையை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், முக்கிய கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்குதல் நடத்துவோம்' என, குறிப்பட்டுள்ளது. இ-மெயில் குறித்து ஆய்வு செய்து வருவதாக, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தலைவர் சின்கா தெரிவித்தார்.
கோழைத்தனமானது - பிரதமர் : ""டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், கோழைத்தனமான செயல்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தாகாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:டில்லி ஐகோர்ட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு நான் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். இது மிகவும் கோழைத்தனமான செயல். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகளின் இந்த படுபாதக செயலை நாங்கள் உரியமுறையில் கையாள்வோம். பயங்கரவாதிகளின் எவ்வித அச்சுறுத்தலுக்கும் பயந்து, ஒருபோதும் அடிபணிந்துவிட மாட்டோம். பயங்கரவாதிகளை வேரறுக்கச் செய்வதில், நாட்டு மக்களும், அனைத்து கட்சிகளும், தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டிய தருணம் இது. பயங்கவாதத்திற்கு எதிராக நீண்ட போரை தொடர வேண்டியிருக்கிறது.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
குற்றவாளிகள் வரைபடம் வெளியீடு : டில்லி ஐகோர்ட்டிற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் (என்.ஐ.ஏ.,) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 20 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள் ளது என, அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சின்கா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ""ஐகோர்ட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலிருந்து, ஆதாரங்களை புலனாய்வு அமைப்பு சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு எந்தவகையான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பரிசோதனை நடக்கிறது.சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை மதியமே, என்.ஐ.ஏ.,யிடம் மத்திய உள் துறை அமைச்சகம் ஒப்படைத்தது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், என்.ஐ.ஏ., அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.தற்போது முதல்முறையாக இந்த அமைப்பு நேரடியாக விசாரணையை துவக்க உள்ளது. டி.ஐ.ஜி., முகேஷ் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., நிதிஷ்குமார் முதன்மை விசாரணை அதிகாரியாக இருப்பார்,'' என்றார். இந்தக் குழுவில் மேலும் ஒரு எஸ்.பி., இரண்டு கூடுதல் எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் 20 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தேசிய பாதுகாப்பு படையினர்(என்.எஸ்.சி.,) சில ஆதாரங்களை எடுத்துள்ளனர். போலீசார் தயாரித்த மேப்: சம்பவ இடத்திற்கு வந்த டில்லி போலீசார், சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், சந்தேகப்படும் வகையில், அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பேரின் படங்களை, கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் நடந்த முக்கிய குண்டுவெடிப்புகள்: 1993 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.
1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.
ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.
2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.
2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.
2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.
2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.
2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜூலை 26: ஆமதாபாத்தில்
நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.
நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.
2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.
செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலி. 76 பேர் காயம்.
சிதம்பரம், உள்துறை அமைச்சரான பின்... : கடந்த 2008ம் ஆண்டு நவ., 30ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு நான்கு நாட்களுக்கு முன், மும்பையில் 10 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.2009ம் ஆண்டு ஜன., 1ம் தேதி, அசாம், கவுகாத்தியில் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலி. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன், சிதம்பரம் இந்த பகுதிக்கு அரசுமுறை பயணமாக வந்தார். 2010 பிப்., 13ம் தேதி, புனேயில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேரும், டிசம்பர் 7ம் தேதி வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தையும் பலியாகினர். கடந்த ஜூலை மாதம், மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் பலியாகினர். நேற்று டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் இறந்தனர். சிதம்பரம் உள்துறை அமைச் சரான பிறகு நடந்த 5 குண்டுவெடிப்புகளில், 42 பேர் இறந்துள்ளனர்.