கடலூர்: ""திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிடாது'' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காது. புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்., கட்சிக்கு பா.ம.க., ஆதரவு தெரிவிக்கும்.தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும். விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூரில் நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் அவர் பேசியதாவது: தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு (தற்போதைய கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை) மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். இன்று நாம் 30 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவில் விவாதித்த போது, நாம் தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்.அதன் காரணமாகவே இனி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்றி தனித்து தேர்தல் களம் காண, பொதுக்குழுவில் முடிவு செய்தோம். இந்த அறிவிப்பிற்குப் பிறகு, வன்னிய இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இனி, வன்னியர்கள் வேறு எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். வன்னிய கிராமங்களில் பா.ம.க., கொடி மட்டுமே பறக்கும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். பிற கட்சிக் கொடி கம்பங்களை சுமுகமான முறையில் அகற்ற வேண்டும். வன்னியர் என்றாலே அவர் பா.ம.க., என்ற நிலையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.