விருதுநகர் : ஒரே வீட்டில் பல ரேஷன் கார்டுகள் பெற்றிருந்தால், அதை கட்டுப்படுத்த வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. போலி கார்டுகள் அதிகரிக்காமல் இருக்க, வழங்கல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே வீட்டின் கதவு எண்ணில் "ஏ', "பி' என வரிசைப்படுத்தி , தனி ரேஷன் கார்டுகள் பெறுவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு செல்லும் அதிகாரிகள், ஒரே வீட்டில் உட்பிரிவுகளில் வீடுகள் இருந்தால், தனி சமையல் செய்பவர்களுக்கு மட்டுமே புது கார்டு வழங்க வேண்டும். ஒரே சமையலறை இருந்து, கூட்டு குடும்பமாக இருந்தால், புதிதாக தனித்து வழங்க கூடாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே வீட்டில் தனித்தனி ரேஷன் கார்டு வழங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.