திருநெல்வேலி : பாளை. யில் வீடு புகுந்து பெண்ணை "கொடூரமாக' கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாளை. சீனிவாசநகர் ஆறாவது மேற்குத்தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரும், மதுரையை சேர்ந்த பரமேஸ்வரியும்(48) கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வசித்து வந்தனர். பரமேஸ்வரியின் முதல் கணவர் ராமமூர்த்தி இறந்து விட்டார். பரமேஸ்வரிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் இறந்துவிட்டான். மகளுக்கு திருமணமாகிவிட்டது. முத்தையா பெருமாள்புரத்தில் கார் டிரைவராக உள்ளார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளான். முத்தையாவின் மகன் அவர் பெற்றோர் பராமரிப்பில் உள்ளான். நேற்றுமுன்தினம் மதியம் முத்தையா பரமேஸ்வரியிடம் போனில் பேசினார். பின்னர் அவர் மீண்டும் போனில் பேசிய போது "ஸ்விட்ச்ஆப்' செய்யப்பட்டிருந்தது. இரவு முத்தையா வீட்டுக்கு வந்து பார்த்த போது பரமேஸ்வரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இதுகுறித்து முத்தையா பாளை. ஐகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன், ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர்கள் பற்குணம், பிரான்சிஸ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினார். விசாரணையில் பரமேஸ்வரி முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சில "திடுக்' தகவல்கள் வெளியாகின. ஆணுறைகள் சிக்கின பரமேஸ்வரி வீட்டில் ஆண்உறைகள், ஆபாச சி.டி.,க்கள், மதுபாட்டில்கள் சிக்கின. முத்தையா வீட்டில் இல்லாத போது சில பெண்கள், ஆண்கள் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். பரமேஸ்வரி "பலான' தொழில் செய்துவந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்தையாவிடம் போலீசார் விசாரித்த போது, "தினமும் மது வாங்கிவரும்படி கூறி தன்னுடன் சேர்ந்து பரமேஸ்வரி குடிப்பார். வீட்டுக்கு வேறு பெண்கள் வந்து சென்றது குறித்து தெரியாது' என கூறியுள்ளார். வீட்டிற்கு வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் பரமேஸ்வரி கொலை செய்யப்பட்டாரா, முன்விரோதம், பணத்தகராறில் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.