தி.மு.க., ஆட்சி மின் துறையில் நிர்வாக சீர்கேடு அம்பலம்| Administrative irregulatiries in electricity board during dmk rule: CAG report indicts | Dinamalar

தி.மு.க., ஆட்சி மின் துறையில் நிர்வாக சீர்கேடு அம்பலம்

Updated : செப் 16, 2011 | Added : செப் 15, 2011 | கருத்துகள் (38) | |
தி.மு.க., ஆட்சியில், தமிழக மின் துறையின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்ட பல கோடி இழப்பு விவரங்களை, மத்திய தணிக்கைத் துறை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதன்படி, ஒரே ஆண்டில், 6,348.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தணிக்கைத் துறை சார்பில், கடந்த 2009-10ம் ஆண்டுக்கான, தணிக்கை ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்
Administrative irregulatiries in electricity board, dmk rule, CAG report,தி.மு.க., ஆட்சி, மின் துறையில் நிர்வாக சீர்கேடு,

தி.மு.க., ஆட்சியில், தமிழக மின் துறையின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்ட பல கோடி இழப்பு விவரங்களை, மத்திய தணிக்கைத் துறை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதன்படி, ஒரே ஆண்டில், 6,348.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய தணிக்கைத் துறை சார்பில், கடந்த 2009-10ம் ஆண்டுக்கான, தணிக்கை ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:முந்தைய 2005-10ம் ஆண்டு காலத்தில், மின் தேவைக்கேற்ப, 3,977 மெகாவாட் மின்சாரம், கூடுதல் உற்பத்தி செய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 290 மெகாவாட் மட்டுமே கூடுதல் உற்பத்தி செய்ததால், 392.37 கோடி ரூபாய் இழப்பாகியுள்ளது. திட்டப்பணிகளுக்காக, 2,175 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் பணியில்லாததால், 133.26 கோடி இழப்பானது. நிலக்கரி கையாள்வதில் குறைபாடு ஏற்பட்டதால், 20.58 கோடி கூடுதல் செலவானது.ஒரே தரமான நிலக்கரி இறக்குமதி செய்ததையும், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், இறக்குமதி செய்ததையும் ஒப்பிடும் போது, தமிழக மின்வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரிக்கு, 337.76 கோடி அதிக செலவாகியுள்ளது.


அதிக நிலக்கரி இறக்குமதியால், 1,103.30 கோடி இழப்பானது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய நிர்ணயத்தை மீறி, நிலக்கரியை அதிகமாக வாங்கியதால், 279.65 கோடி கூடுதல் செலவானது. அளவுக்கதிகமான துணை மின் ஆற்றல் பயன்பாட்டால், 281.63 கோடி இழப்பானது.அதிக அளவு மின்சாரக் கொள்முதலால், 64 சதவீத நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதுதான், மின்வாரிய நிதிநிலை மோசமானதற்குக் காரணம். கொள்முதலுக்காக, 59 சதவீத நிதி செலவாகியுள்ளது. 15 சதவீதம் மூலப்பொருட்களுக்கும், பத்து சதவீதம் வட்டிக்கும் செலவானது. மின் கட்டணத்தால், 89 சதவீதம் வருவாய் கிடைத்தது; மானியம் மூலம், வெறும் 9 சதவீதம் மட்டுமே கிடைத்தது.


ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவை விட, 1.68 ரூபாய் குறைவாக விற்கப்படுவதால், அதிக நஷ்டம் ஏற்பட்டது. மின் பகிர்மான இழப்பை, 15 சதவீதமாகக் குறைக்காததால், 3,087.62 கோடி ரூபாய் இழப்பானது.தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய, காரேபல்மா-2, மந்தாகினி நிலக்கரி சுரங்கத்தைத் தோண்டாததால், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு, அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி ஒப்பந்தங்களை, தனித்தனியாகக் கொடுத்ததால், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய, 133.26 கோடி ரூபாய் சலுகை விரயமானது. அனல்மின் நிலைய கிடங்குகளில், நிலக்கரி இருப்பு வைக்காததால், 266.40 கோடி இழப்பு ஏற்பட்டது. துறைமுகத்தில், கப்பலில் இருந்து, நிலக்கரி கொண்டு வரும் பெல்ட்டுகள் பழுதாகி சரிசெய்யாததால், நிலக்கரி கொண்டு வருதல் தாமதமாகி, 6.61 கோடி ரூபாய் வீணானது.


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், நிலக்கரி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு, கட்டாயப் பணி நிறுத்தம் நடந்தது. இதனால், 12.75 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இதேபோல், நிலக்கரி கையாள்வதிலான சிக்கல், கட்டாயப் பணி நிறுத்தத்தால், வடசென்னை அனல்மின் நிலையத்தில், 144.07 கோடி இழப்பு ஏற்பட்டது. 2005-09 இடையிலான மானிய இடைவெளித் தொகை, 10,090.10 கோடி ரூபாயை மாநில அரசு, வாரியத்திற்குத் தரவில்லை.தமிழக மாசுக் கட்டுப்பாட்டுத் துறை சான்றிதழ் கட்டணம், 60.75 லட்சத்தை வாரியம் செலுத்தவில்லை. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், அதிகமாகப் பரவும் மாசுவைக் கட்டுப்படுத்த, உரிய திட்டமிடவில்லை. 35 ஆண்டுகள் நிறைவான 16 நீர் மின் நிலையங்களில், இரண்டை மட்டுமே ஆயுள் நீட்டிப்பு செய்துள்ளனர்.


இரவு நேர மின் பயன்பாடு வரி விலக்கியதால், 38.85 கோடி இழப்பானது. 12 டிரான்ஸ்பார்மர்கள் வாங்க, டிரான்ஸ்பார்மர்ஸ் அண்ட் ரெக்டிபயர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு, இரண்டு விலைகளில் ஒப்பந்தம் செய்ததால், 7.07 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. புதிய மின் இணைப்புகளை வழங்க காலம் தாழ்த்தியதில், 4.73 கோடியும், மென்பொருள் நிறுவனங்களுக்கு கட்டணச் சலுகை மற்றும் சரியாகக் கணக்கிடாதது ஆகியவற்றால், 2.63 கோடி ரூபாயும், காற்றாலை நிறுவனங்களிடம் வருமான வரி பிடிக்காததால், 2.07 கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின் அழுத்தப் பயன்பாட்டால், 1.59 கோடியும் இழப்பு ஏற்பட்டது.இதன்படி, கடந்த தி.மு.க., ஆட்சியில், மின்வாரிய நிர்வாகச் சீர்கேடுகளால், ஒரே ஆண்டில், 6,348.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


நமது சிறப்பு நிருபர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X