புனே: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்ட நரேந்திர மோடி, முஸ்லிம் மத குரு ஒருவர் அளித்த குல்லாவை அணிய மறுத்ததற்கு, சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தி, சமீபத்தில், மூன்று நாள் உண்ணாவிரதம் (சத்பாவனா) மேற்கொண்டார். அப்போது, மேடைக்கு வந்த முஸ்லிம் மதகுரு ஒருவர், மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்தியதுடன், குல்லா ஒன்றை அணிவிக்க முன்வந்தார். ஆனால், அந்த குல்லாவை அணிந்துகொள்ள மோடி மறுத்து விட்டார். இதைப் பாராட்டி, சிவசேனா கட்சிப் பத்திரிகை, "சாம்னா'வில் வெளியிடப்பட்ட கட்டுரையில், "முஸ்லிம் மத குரு அளித்த குல்லாவை அணிய மறுத்த, மோடிக்கு பாராட்டுக்கள். சிறுபான்மையின மக்களை, "தாஜா' செய்வதால் மட்டுமே, மதசார்பின்மையை நிரூபிக்க முடியும் என்றில்லை. இதை, காங்., கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தற்போதைய பாதையில் தொடர்ந்தால், டில்லியில் அவர் பிரதமராகி, ராஜ்பாத்தில் வலம் வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.