வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும், 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், பா.ஜ., தனித்துப் போட்டியிட, பிரதமர் மோடி பச்சைக்கொடி காட்டி விட்டார்' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. 'எப்படியும், 25 தொகுதிகளில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று விடும்; தமிழகத்திற்கு, ஐந்து மத்திய அமைச்சர் பதவிகள் கிடைக்கும்' என்றும் சொல்கிறார் அவர்.
'நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும்' என்று, தமிழில் ஒரு பழமொழி உண்டு. அண்ணாமலை பேச்சை கேட்கையில், அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில், கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்று சாதனை படைத்த பெருமை, ஜெயலலிதாவையே சேரும். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் செய்யாத, மகத்தான சாதனையை செய்து, வரலாறு படைத்தவர் அவர் தான்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல, மக்கள் செல்வாக்கு இருக்குமா என்பது சந்தேகம். உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட, பா.ஜ., ஒரு நகராட்சியை கூட கைப்பற்றவில்லை. லோக்சபா தேர்தலில், கேவலம் நான்கு தொகுதிகளை பிச்சையாக கேட்டுப் பெற, மற்ற கட்சிகளோடு கூட்டணி வைப்பதில், தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார், அண்ணாமலை.
![]()
|
விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., போன்ற கட்சியினர், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி., பதவியை பெற்றனர் என்பது, அண்ணாமலைக்கு தெரியாதா?
காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்றால், நம் அரசியல் வியாபாரிகள், காரியம் தான் பெரிது என்பர். தமிழகத்தில், பா.ஜ., தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது, நுாற்றுக்கு நுாறு சாத்தியமே இல்லை; திராவிட கட்சிகளை எதிர்த்து வெற்றி பெறுவதும், குதிரைக் கொம்பு தான்.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியலில் வெற்றி பெற்றது போல, தமிழகத்தில், பா.ஜ., வெற்றி பெற்று விடலாம் என்று, அண்ணாமலை கனவு கண்டால், அது, வெறும் பகல் கனவாகவே முடியும்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தனித்துப் போட்டியிட்டு எதுவும் சாதிக்க முடியாததை நாம் அறிவோம். அவரின் வரிசையில், அண்ணாமலையும் சேர்ந்து விடாமல் இருப்பது நல்லது. மேலும், ஹிந்துக்கள் ஓட்டு எல்லாமே, பா.ஜ.,வுக்கு தான் முழுமையாக கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.
ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்லா விட்டாலும், தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு பண முடிப்புகளை வழங்கி, ஓட்டுகளைப் பெற முற்படுவர் தி.மு.க.,வினர்.
அதனால் அண்ணாமலை அவர்களே.... தனித்துப் போட்டி என்ற விபரீதத்தில் இறங்க வேண்டாம்; அப்படி இறங்கினால், அது உங்களின் அரசியல் வாழ்க்கைக்கு பாதகமாகவே அமையும்... ஜாக்கிரதை!