திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் மெய்ப் பொருள் நாயனாருக்கு கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.மலையமாநாட்டின் தலைநகரம் திருக்கோவிலூர். இதனை ஆண்டவர் மெய்ப்பொருள் நாயனார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரை சிவ பக்தர்கள் திருநீற்று செல்வர் என அழைப்பர். முத்தநாதன் என்ற அரசர் வஞ்சனையால் சிவவேடம் தரித்து ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெய்ப்பொருள் நாயனாரை குத்தினான்.
இதனை பார்த்த தத்தன் என்ற மெய்காப்பாளன் முத்தநாதனை தாக்க முயன்றபோது இவர் நம்மவர் இவருக்கு யாதொரு துன்பமும் நேராவண்ணம் நம் எல்லையில் விட்டுவா எனக் கூறி வரும் வரை விழித்திருந்து உயிர் நீத்தவர் மெய்ப்பொருள் நாயனார்.அவர் அவதரித்து, சித்தியடைந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியாகும். 63 நாயன்மார்களில் இவர் ஒருவருக்கே திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் தனியாக கோவில் அமைக்கப்பட்டுள் ளது. இது சிதிலமடைந்து இருந்தது. இதனை திருக்கோவிலூர், கீழையூர் மெய்ப்பொருள் நாயனார் வழிபாட்டு மன்றம், அறுபத்து மூவர் திருப்பணி மன்றம் இணைந்து புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மெய்ப்பொருள் நாயனாரின் உருவம் பொரித்த தூண் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமானப் பணியின் போது இவை பழமை மாறாமல் நிறுத்தப்படவுள்ளது.