கண்ணின் பார்வை நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் கண்நீர் அழுத்த நோய் எனப்படும் 'க்ளுக்கோமா'. இந்தியாவில் 1.2 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 முதல் 50 சதவீத கண் நோய்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. 2040ல் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணில் ஒருவகையான திரவம் சுரக்கும். இது அதிகமாக சுரந்தாலோ அல்லது சுரப்பியில் அடைப்பு ஏற்பட்டாலோ கண்ணின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் பார்வை நரம்பும் பாதிக்கப்படுகிறது.
யாருக்கு பாதிப்பு வரும்:
கண்நீர் அழுத்த பிரச்னை பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். 50 வயதிற்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், கண்ணில் அடிபடுதல், ஒற்றை தலைவலி, குடும்ப உறுப்பினர்களுக்கு 'க்ளுக்கோமா' இருந்தாலும் இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
விளக்கை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தாலோ, அடிக்கடி தலைவலி வந்தாலோ, கண் கண்ணாடியில் 'லென்ஸ் பவர்' அடிக்கடி மாறி கண்ணாடியை மாற்றும் நிலை ஏற்பட்டாலோ கவனத்தில் கொள்ள வேண்டும். பக்கப்பார்வையில் தடுமாற்றம் அடைந்தாலும் டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
குழாய் வழியாக பார்த்தால் எந்தளவுக்கு பார்வை தெரியுமோ அந்தளவுக்கு பார்வை தெரியும் நிலை கூட ஏற்படலாம். ஒரே நாளில் இந்நிலை ஏற்படாது. சிகிச்சை செய்யாமல் அலட்சியமாக இருக்கும் போது தான் இந்நிலை ஏற்படும். தொடக்கத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் இந்நோயை தடுக்கலாம். பிறநோய்கள் போன்று கண்நீர் அழுத்த நோய் எந்த அறிகுறியும் வெளிப்படுத்துவதில்லை. ஆண்டுக்கு 2 முறை கண்பரிசோதனை செய்வது நல்லது. உடலில் ரத்தஅழுத்தம் பார்ப்பது போல இதையும் வழக்கமாக்க வேண்டும்.
இந்நோய்க்கு தீர்வாக சொட்டுமருந்து, லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை உள்ளன. சொட்டுமருந்தும் லேசர் சிகிச்சையும் நிரந்தர தீர்வாகாது. வாழ்நாள் முழுவதும் சொட்டுமருந்து எடுக்க நேரிடும். லேசர் சிகிச்சையும் தற்காலிக தீர்வையே தரும்.
குழந்தைகளுக்கு வருமா:
பிறந்த குழந்தைகளின் கண்கள் பெரிதாக இருக்கலாம். கண்ணின் கருவிழி இயல்புக்கு மாறாக பெரிதாக இருக்கும். இதற்கு 'புப்தால்மஸ்' என்று பெயர்.
கண்ணின் கருவிழி வெளிறி இருக்கலாம். கண் பரிசோதனை செய்து அழுத்த உயர்வு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். கண் பெரிதாக இருப்பதால் முன் கண் அறையில் உற்பத்தியாகும் திரவம் வெளியாவதில் தடை ஏற்பட்டு தேக்கம் அடைந்து அழுத்தம் அதிகமாகும். இதற்கு ஒரு எளிய சிகிச்சை செய்து திரவம் எளிதில் வெளியேற வழி செய்யப்படும்.
இதன் மூலம் அழுத்தம் குறைக்கப்படும். தேவைக்கு ஏற்ப சொட்டுமருந்து ஊற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னையை பொறுத்த வரையில் ஆரம்பநிலையில் கண்டறிந்து முறையான தொடர் சிகிச்சை பெறுவதே நல்லது.
பெரிய கருவிழி இருந்தால் கண்நீர் அழுத்த உயர்வு இருக்க வேண்டும் என்பதில்லை.
'புப்தால்மஸ்' போன்று 'மெகலோ' கருவிழி என்ற நிலையிலும் கருவிழி பெரிதாக தான் இருக்கும். கண்பரிசோதனை செய்தால் அழுத்த பாதிப்பு இருக்காது.
ஒரு பொருளை பார்க்கும் போது அந்த செய்தியை மூளைக்கு கடத்துவது பார்வை நரம்புகள் தான். பார்வை நரம்பு கெட்டு போனால் மீண்டும் சரிசெய்ய முடியாது. எனவே அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம்.
பிறந்த குழந்தைகளுக்கு கண்ணில் பிரச்னை இருப்பதாக சந்தேகப்பட்டால் உடனே டாக்டரிடம் செல்வது நல்லது. 3 வயதில் ஒரு முறையும் பள்ளியில் சேர்க்கும் முன் ஒருமுறையும் குழந்தைக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
40 வயதை கடந்த 'மெனோபாஸ்' நிலையில் உள்ள பெண்கள், சர்க்கரை நோய், ரத்தஅழுத்த நோயாளிகள் 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் கண்பரிசோதனை செய்ய வேண்டும். 'க்ளுக்கோமா' வருமுன் காப்பதே சிறந்தது.
கண் சிறப்பு நிபுணர்
மதுரை, 93840 20143.