புதுடில்லி : குஜராத்தில், 2004ம் ஆண்டு நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இளம்பெண், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என்பது தெரியவந்துள்ளது.
குஜராத்தில், 2004, ஜூன் 15ம் தேதி ஆமதாபாத்தின் புறநகரில் காரில் வந்த ஒரு கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டை நடந்தது. இச்சண்டையில் காரில் இருந்த இளம் பெண் இஷ்ரத் ஜகான், ஜாவீத் ஷேக் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.இந்த நான்கு பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக விசாரணையில் தெரிந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இஷ்ரத்தின் தாய் மறுத்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வாசனை திரவிய நிறுவனத்தில் பணி புரிந்த தன்னுடைய பெண், சக ஊழியர்களுடன் வீடு திரும்பிய போது போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, கடந்த ஆண்டு சிகாகோவில் கைது செய்யப்பட்டான். இவனிடம் தற்போது தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் அமெரிக்கா சென்று விசாரித்தனர்.குஜராத்தில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான், லஷ்கர்-இ-தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என, டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான். இந்த வாக்குமூலத்தின் மூலம் நீண்ட கால புதிருக்கு விடை கிடைத்துள்ளதாக மத்திய புலனாய்வுத்துறையினர் நம்புகின்றனர்.