ஜம்மு: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக, ஐம்மு காஷ்மீரில் இருந்து மூன்று மொபைல் போன்களை, தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைப்பற்றினர். டில்லி ஐகோர்ட்டில், கடந்த மாதம் 7ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் உயிர் இழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தினர் . மூன்று மொபைல்போன்களை கைப்பற்றினர். இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.