பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தார் ஜெ.,

Updated : அக் 21, 2011 | Added : அக் 20, 2011 | கருத்துகள் (73)
Advertisement

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐந்தரை மணி நேரத்துக்கும் மேலாக கேள்விகள் கேட்டும் முடிவடையாததால், இன்று காலை, 11 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில், குற்ற விசாரணை முறை சட்டம் 313வது பிரிவின் கீழ், சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நீதிபதி கேள்வி கேட்டு, பதிலை பதிவு செய்யும் நடைமுறைக்காக, அக்., 20ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறை எதிரிலுள்ள புதிய சிறப்பு கோர்ட்டில் ஆஜராகுமாறு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பெங்களூரு ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தை வந்தடைந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் பரப்பன அக்ரஹார கோர்ட்டிற்கு நேற்று வந்து சேர்ந்தார்.

பரப்பன அக்ரஹார பகுதியில் தமிழகம், கர்நாடகாவைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலையிலிருந்தே அப்பகுதியில், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர். கோர்ட் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காலை, 10.30 மணிக்கு கோர்ட்டிற்கு வந்த ஜெயலலிதா, காலை, 11 மணி வரை தன் காரில் அமர்ந்திருந்தார். 11 மணிக்கு கோர்ட் விசாரணை துவங்கியது. கோர்ட்டில், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா தன் இருக்கையில் அமர்ந்ததும், ஜெயலலிதாவிற்காக போடப்பட்டிருந்த சாதாரண, "ஒயர் சேரில்' அமருமாறு கூறினார். ஜெயலலிதா தன் இருக்கையில் அமர்ந்தார்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யலு, உதவி வழக்கறிஞர்கள் சவுட்டா உட்பட மூவரும், ஜெ., தரப்பில் குமார், கந்தசாமி, அசோகன், செந்தில்குமார், சரவணகுமார், வெங்கடேஸ்வரலு, சந்தானகோபால், பாரதி ஆகியோரும் ஆஜராயினர். குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோரும் கோர்ட்டில் அமர்ந்தனர்.
அரசு தரப்பில் ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்கும் பணி துவங்கியது. கேள்விகளுக்கு ஜெயலலிதா அமர்ந்தவாறே பதிலளித்தார். காலை, 11 மணியிலிருந்து மதியம், 2 மணி வரையிலும், மதியம், 2.45 மணியிலிருந்து 5.15 மணி வரையிலும் ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

மாலை, 5.15 மணியளவில், கோர்ட்டை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் கார் மூலம் ஹெச்.ஏ.எல்., விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். நேற்று நடந்த விசாரணை குறித்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யலு கூறுகையில், ""இன்று (நேற்று) காலை, 11 மணியிலிருந்து 2 மணி வரை, 243 கேள்விகளும், மதியம், 2.45 மணியிலிருந்து 5.15 மணி வரை, 136 கேள்விகளும் என, மொத்தம், 379 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டன. கேட்ட கேள்விகளைப் பொருத்து, அவர் பதிலளித்தார். நாளை (இன்று) காலை, 11 மணிக்கு கோர்ட் கூடும்,'' என்றார்.

ஜெ., வழக்கறிஞர் குமார் கூறியதாவது: மொத்தம் 380 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு திடமாகவும், உறுதியாகவும், தீர்க்கமாகவும், தெளிவாகவும் அவர் பதிலளித்தார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேவையற்றது என்பதை நீதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தார். சாட்சிகள் கூறிய வாக்குமூலத்தின் சாராம்ச அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, நாளையுடன் (இன்று) கேள்வி கேட்டு, பதிலை பெற்றுக் கொள்ள வேண்டும். நாளை மறுநாள் (நாளை) தொடருமா என்பதை என்னால் கூற இயலாது. நாளை (இன்று) காலை, 11 மணிக்கு ஜெயலலிதா ஆஜராவார் என்றார்.

"இடைவேளை தேவையில்லை' : சரமாரியாக பதிலளித்த ஜெ., : சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார் என, சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார். ஜெயலலிதா வழக்கில், 259 சாட்சிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இதில், நேற்று, 92 சாட்சிகளின் வாக்கு மூலத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு, "ஐ டோண்ட் நோ' (எதுவும் தெரியாது) என்று தெரிவித்தார். சில கேள்விகளுக்கு விரிவாகவும், சில கேள்விகளுக்கு சாதாரணமாகவும் ஜெயலலிதா பதிலளித்தார். ஜெயலலிதாவுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றம், 20க்கு, 20 அளவு கொண்டது. "ஏசி' வசதி செய்யப்படவில்லை. மின் விசிறி மட்டும் போடப்பட்டிருந்தது. காலை, 11 மணியிலிருந்து, மதியம், 2 மணி வரையிலும், மதியம், 2.45 மணியிலிருந்து மாலை, 5.15 மணி வரையிலும் நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதா தண்ணீர் கூட அருந்தவில்லை. இருக்கையை விட்டு எழுந்தும் செல்லவில்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இடைவேளை விடுமாறு, ஜெ., வழக்கறிஞர்கள், நீதிபதியிடம் கேட்ட போது, "இடைவேளை தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கலாம்' என, ஜெயலலிதா கூறி விட்டார். போயஸ் கார்டன் புதுப்பிப்பு, கொடநாடு எஸ்டேட் வாங்கியது யார், பராமரிப்பது யார், திருநெல்வேலி பகுதியில் வாங்கிய நிலங்கள், வாகனங்கள், பங்குச் சந்தை, பங்குகள் விற்பனை போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாகவும், உறுதியாகவும் தெளிவாகவும் பதில் கூறினார். அவசியமான கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார்.

எல்லையிலேயே அ.தி.மு.க., வாகனங்களுக்கு தடை : ஓசூர் அடுத்த தமிழக, கர்நாடகா எல்லையில் அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், ஆணைக்கல் ஆகிய, பெங்களூரு செல்லும் முக்கிய வழித்தடங்களில், ஆயிரக்கணக்கான, கர்நாடகா போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை மற்றும் ஓசூர் உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த முக்கிய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர் அணியினரை, நேற்று அதிகாலை முதலே, தடுத்து நிறுத்தினர்.
வெள்ளை சட்டை, வேஷ்டி மற்றும் கதர் சட்டை அணிந்து வந்தவர்களை மடக்கி திருப்பி அனுப்பியதால், இந்த உடை அணிந்த ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வணிகர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர்.
அத்திப்பள்ளியில் இருந்து ஜுஜுவாடி வரை, மாநில எல்லையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், ஓசூர்-பெங்களூரு இடையே போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
பரப்பன அக்ரஹாரா கோர்ட் அமைந்திருந்த பகுதியைச் சுற்றி, 500 மீட்டர் சுற்றளவுக்கு, 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர்கள் குமார், கந்தசாமி, அசோகன், மூர்த்திராவ், சரவண குமார், ராஜன், விவேகானந்தன், பன்னீர் செல்வம், ரங்கராஜன் ஆகியோரும், எம்.பி., தம்பிதுரை, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், செங்கோட்டையன், பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் பாலாஜி, பழனிசாமி, கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, புத்திசந்திரன், பழனியப்பன், வேலுமணி, செந்தமிழன் போன்ற அமைச்சர்களும் தடுப்புகளை தாண்டி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
* கர்நாடக அ.தி.மு.க.,வினரும் திரண்டு வந்திருந்தனர்.
* இந்த கிராம மக்கள், தங்கள் இடத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட வில்லை. பள்ளி வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

நட்சத்திர ஓட்டலில் இருந்து வந்தது சான்ட்விச்: காலையில் வந்த ஜெ., மதியம் வரை கோர்ட்டில் இருக்க வேண்டியது வந்ததால் இவருக்கு மதியம் சான்ட்விச் கொண்டு வரப்பட்டது. இதற்கென நட்சத்திர ஒட்டலுக்கு சென்று அ.தி.மு.க., நிர்வாகிகள் வாங்கி வந்தனர்.சாண்ட்விச்சை, ஜெயலலிதா, மதிய உணவு இடைவேளையின் போது, தனது காரில் இருந்தவாறே சாப்பிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
22-அக்-201110:53:18 IST Report Abuse
sudhapriyan விடுங்கப்பா ... உட்கார வச்சிடீங்க.. அப்புறம் குத்துது குடையுது அப்படின்னு சொல்ல கூடாது .... இப்பவே எல்லாத்துக்கும் தயாராயிடுங்க......
Rate this:
Share this comment
Cancel
Somu - Jurong,சிங்கப்பூர்
22-அக்-201107:51:49 IST Report Abuse
Somu ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் கோர்ட் மரியாதையை கொடுத்து கேள்வி கேட்பது அவர் சி எம் என்பதாலோ அல்லது அமைச்சர் என்பதாலோ அல்ல. அவர் மக்கள் பிரதிநிதி என்பதால்தான். அந்த மரியாதையை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை.
Rate this:
Share this comment
Cancel
S.N - chennai,இந்தியா
21-அக்-201120:50:00 IST Report Abuse
S.N நிருபர்களுக்கு மறதி அதிகம். திரு கருணாநிதி நீதியை பற்றி வாய் கூசாமல் பேசுகிறார். என்றும் அவர் நீதிக்கு தலை வணங்கும் மனிதராம். ஆனால் ஜெயலலிதா வாய்தா வாங்குபவராம். பெற்ற மகள் கனிமொழியை தனது மகளே இல்லை என்று சொல்லி ஒரு அப்பாவி நிருபரை கோர்ட்டில் தண்டித்த சத்ய புருஷனுக்கு உடன் பிறப்புகள் சிலை எடுக்க வேண்டும். அறிவாலயம் கழகத்தின் சொத்து என்று சொல்லி ஒரே இரவில் சன் டிவி விரட்டப்பட்டு தனக்கும் தன் பெயரில் வரும் தொலைகாட்சிக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி அறிவாலய இடம் மட்டும் கொடுத்து விட்டார். அப்பாவி உடன் பிறப்புகளை பேசி பேசி மதி மயங்க செய்த வாய் சவடால் வீரர் அவர்.... கனிமொழி சிறையில் இருக்கும் வரை டெல்லியில் யாரையும் சந்திக்க போவது இல்லை என்று போனமுறை கூறினார் அவருக்கும் ப சிதம்பரம் போல், நிருபர்க்கள் போல் மறதி அதிகம். பத்திரிகை சந்திப்பில் கேட்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X