காபூல்: பாகிஸ்தான் மீது அமெரிக்காவோ, இந்தியாவோ போரிட நேரிட்டால் பாகிஸ்தானுக்கு , ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானை தாக்க நினைத்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய், காபூல் அதிபர் மாளிகையில், டி.வி. சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி, பாகிஸ்தான் எப்போதும் எங்களது நட்பு நாடு, தற்போது ஹக்கானி நெட்வொர்க் குறித்து பாகிஸ்தான், அமெரிக்கா இடையே ஆப்கான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து அமெரிக்கா, பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதி மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்திவருவது சரியல்ல.இந்தியாவோ, அமெரிக்காவோ, யாராக இருந்தாலும், பாகிஸ்தான் மீது படை எடுத்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் செயல்படும். பாகி்ஸ்தான் மீது போர் தொடுக்க யார்நினைத்தாலும் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம். இவ்வாறு கர்சாய் கூறினார். கர்சாயின் இந்த பேட்டியால், அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.