தமிழகம்-கேரள மாநில அரசுகளுக்கிடையே முல்லைப்பெரியாறு அணை விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,) மூக்கை நுழைத்து பிரச்னையை கிளப்புகிறது கேரளா அரசு.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பாசன நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பி.ஏ.பி., திட்டத்தில் முக்கிய அணையாகவும், முதுகெலும்பாகவும் விளங்கும் பரம்பிக்குளம் அணை கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதன் துணை அணைகளான தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளும் கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளன.பி.ஏ.பி., திட்டத்திற்காக 1958, நவ., 9ல் தமிழக, கேரளா மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. திட்ட ஒப்பந்தத்தை 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. திட்ட ஒப்பந்தம் குறித்து 1992ல் இருமாநில அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடந்த போது, பி.ஏ.பி., திட்டத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள அணைகளை கேரளா வசம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கேரளா அதிகாரிகள் பகிர்ந்து வழங்குவார்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அணை பராமரிப்புக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது.
சமீபத்தில் பரம்பிக்குளம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவுக்கு வந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக- கேரளா எல்லையில் உள்ள செமணாம்பதியில் இருந்து தேக்கடி செட்டில்மெண்ட் வழியாக பரம்பிக்குளத்திற்கு வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.செமணாம்பதி வழியாக அமைக்கப்படும் புதிய வழித்தடத்தால் வனப்பகுதியை அழிப்பதால் இயற்கை பாதிப்பதுடன், வன உயிரினங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும். எனவே, வனத்தை அழித்து ரோடு போடும் முயற்சியை கேரளா அரசு கைவிட வேண்டும். பரம்பிக்குளம் வனத்தை பாதுகாக்க மத்திய அரசு வன பாதுகாப்பு சட்டத்தையும், புலிகள் பாதுகாப்பையும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தெரியாத ரகசியம்?: பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு செல்ல ஆனைமலை, சேத்துமடை, டாப்சிலிப் வழித்தடத்தை விட்டால் வேறு வழியே இல்லை. ஆனால், மேலும் இரண்டு வழித்தடம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்?கேரளா மாநிலம் கொல்லங்கோட்டில் இருந்து நெல்லியாம்பதி, 30 ஏக்கர், தேக்கடி வழியாக பரம்பிக்குளத்திற்கு செல்ல வனத்துறை வழித்தடம் உள்ளது. இங்கு பெரிய பள்ளங்கள், மலைச்சரிவுகள், வனவிலங்குகள் அதிக நடமாட்டம் இருப்பதால் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கேரளா அரசு கைவிட்டது.கேரளா மாநிலம் காம்பரச்சள்ளாவில் இருந்து தமிழக எல்லையில் உள்ள செமணாம்பதி வந்து விட்டால், அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள தேக்கடி என்ற மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று விடலாம். இந்த பகுதிக்கு ரோடு போடுவதற்கு தான் தற்போது கேரளா அரசு திட்டமிட்டு வருகிறது. தேக்கடி சென்று விட்டால், அங்கிருந்து தூணக்கடவு அணை வரையிலும் ரோடு உள்ளது. அந்த வழித்தடத்தை அகலப்படுத்தினால் பரம்பிக்குளத்திற்கு நேரடி வழித்தடத்தை உருவாக்கி விடலாம் என்பது கேரள அரசின் கனவாகும்.
செமணாம்பதியில் இருந்து தேக்கடி செல்லும் வழித்தடத்தை பார்வையிட்ட ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: கேரளா மாநிலத்தில் வனத்தை அழித்து ரோடு போட்டாலும் பாதிக்கப்படப்போவது இருமாநிலமும் தான். மழை வளம் குறையும், வனவிலங்குகளின் வழித்தடம் பாதிக்கும், மனித- வனவிலங்கு மோதல் இருமாநிலத்திலும் அதிகரிக்கும்.வனத்தை அழித்து பாதை அமைப்பது ஏற்க முடியாது. கேரளா அரசின் இந்த முயற்சிக்கு, அம்மாநிலத்திலுள்ள இயற்கை ஆர்வலர்களே ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். எனவே, கேரளா அரசின் செயல்பாடுகளை கண்காணித்து தடுக்க தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பாலாறு படுகை திட்டக்குழுதலைவர் பரமசிவம் கூறியதாவது:பி.ஏ.பி., திட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் தடையின்றி வழங்கப்படுகிறது.கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தபடி, பரம்பிக்குளத்திற்கு நேரடி வழித்தடம் அமைக்கப்பட்டால், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மூன்று அணைகளை கேரளா அரசு தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு முல்லைப்பெரியாறு போன்று பிரச்னை செய்வார்கள் என்று தமிழக விவசாயிகள் அச்சப்படுகிறோம், என்றார்.
வனத்தில் புது பாதை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்காது என்பதை தெரிந்தும் தமிழகத்தை மிரட்டுவதற்காக கேரளா முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார். பரம்பிக்குளத்திற்கு பாதை அமைத்து, அணைகளை கைவசப்படுத்த நினைத்தால் தமிழக விவசாயிகள் உயிரைக்கொடுத்தாவது அணைகளை காப்போம், என்றார்.
-நமது சிறப்பு நிருபர் -