திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் ரதம் சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார்? என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன.
பேட்டரியுடன் குண்டு இணைப்பு
போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது.
யாருக்கு தொடர்பு?
வெடிகுண்டுகளை மணல் மூட்டைகளுக்கிடையே வைத்து பிரித்தபோது, அதில் 7 கிலோ எடையுள்ள, "ஹை பவர் ஜெலட்டின் ஜெல்' வைக்கப்பட்டிருந்தது; அதனுடன் டெட்டனேட்டர்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவை செயலிழக்க வைக்கப்பட்டன. "ஜெல் 90' வகையைச் சேர்ந்த இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. இந்த வகை வெடி மருந்து, அரசு வெடி மருந்து கிட்டங்கியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில் நக்சலைட்கள், வடமாநில பயங்கரவாதிகள் அல்லது ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆலம்பட்டியை தேர்வு செய்தது ஏன்?
* "இசட்' பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் பாதையில், பாலங்கள் உட்பட முக்கிய கிராமங்களில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பாலத்தில் இரவு நேரத்திலும், நேற்று காலையிலும் கூட பாதுகாப்பிற்காக யாரும் நிறுத்தப்படவில்லை.
* திருமங்கலம் - ராஜபாளையம் இடையே உள்ள ரோட்டில் இந்த ஆலம்பட்டி தரைப்பாலம் மட்டும் தான் குறுகியது. எனவே, யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டு வைத்தவர்கள் இப்பாலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
*போலீசார் கூறுகையில், "சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். பைப்பிற்குள், 4 பிளாஸ்டிக் பைகளில், 4 அடிக்கு கருமருந்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டை, மொபைல் போன் மூலம் "ஆபரேட்' செய்ய திட்டமிட்டிருக்கலாம்' என்றனர்.
* பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்ததும், ஒரு மணி நேரம் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
* இச்சம்பவத்தால், அத்வானி ஆலம்பட்டி வழியாகச் செல்லாமல், விருதுநகர், சிவகாசி நான்கு வழிச்சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
கோவையை தொடர்ந்துமதுரையிலும் குறி
அத்வானி, 1998ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் பலியாகினர்; விமானம் தாமதமாக வந்ததால், அத்வானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில், மதுரையில் நேற்று அவரை குறி வைத்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இதற்கான வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பயமுறுத்தவோ, எச்சரிக்கவோ அல்லாமல், தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம். இதற்காகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், குறுகிய பாலத்தில் சதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் என, போலீசார் கருதுகின்றனர்.மதுரை சிறையில் இருந்து விசாரணை கைதிகளை, ஆலம்பட்டி வழியாக தென்காசி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். கைதிகளில் யாரையாவது கொலை செய்ய, இந்த குண்டுகள் வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை ரிங் ரோடு ஓடைப் பாலத்தின் அடியில், நெல்லையில் இருந்து வந்த கைதிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த, "கூஜா வெடிகுண்டுகள்' கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் மிரட்டல்
மதுரைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மாட்டுத்தாவணி எதிரே இருந்த டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வெடித்தது. கடந்த செப்., 30ல் புதூர் அரசு பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அத்வானி செல்லும் பாதையில், சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேசதுரோகிகளின் முயற்சி:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
"" அத்வானி யாத்திரை வழியில் வெடிகுண்டு வைத்தது தேசதுரோகிகளின் முயற்சியாக இருக்க வேண்டும்,'' என மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:இச்செயல் கோழைத்தனமான ஒன்று. இதுபற்றி பா.ஜ., கவலை கொள்ளவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பர். அத்வானியின் யாத்திரை, ஊழல், லஞ்சம் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரானது என அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல என தெரிந்த பிறகும், இத்தகைய முயற்சிகள் நடப்பது தேசதுரோகிகளின் முயற்சிகளாக தான் இருக்க முடியும். நாடு நன்றாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், என்றார்.
பவர் ஜெல் வெடி மருந்து என்றால் என்ன?
பல்வேறு ரசாயனங்களில் இருந்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில், "பவர் ஜெல் வெடி மருந்து' ஒரு வகை.நைட்ரோகிளிசரின், டி.என்.டி., அசிட்டோன் பெராக்சைடு, ஆர்.டி.எக்ஸ்., அல்லது நைட்ரோசெல்லுலர் ஆகிய ரசாயன பொருட்களை அதிக அழுத்தத்தில் சிலிண்டர் அல்லது பைப்பில் அடைத்து, அதை திடீரென எரிய வைத்தால், அதிக சக்தி, வெப்பம் மற்றும் நெருப்பு வெளிப்படும். இது சில மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.வெடி மருந்தை வெடிக்கச் செய்வதற்கு, திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால், இவ்வகை வெடிகுண்டுகள், "பவர் ஜெல்' என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் இவ்வகை வெடிகுண்டுகள் அதிகம் பயன்படுத்தப்படும்.