மதுரை : மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி செல்ல இருந்த பாதையில் "பைப்' வெடிகுண்டு வைத்த மதுரையைச் சேர்ந்த இஸ்மத், அப்துல் ரகுமான் என்ற அப்துல்லா ஆகிய இருவரை, சிறப்பு புலனாய்வு பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் இமாம் அலியின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது. மதுரையில் அக்.,28ல் அத்வானிரதயாத்திரையை துவக்கினார். அவர், திருமங்கலம் வழியாக விருதுநகர் செல்ல இருந்தார். அவர் செல்லயிருந்த பாதையில் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே குறுகலான பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த "பைப்' வெடிகுண்டு வைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ், செல்வம் வெடிகுண்டு பைப்பில் இணைக்கப்பட்டிருந்த வயரை கண்டுபிடித்து, தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அத்வானி மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டார். இவ்வழக்கை சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா,26, மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத்,22, ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில், ""இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,'' என்றார்.இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE