வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதற்கு தான், நாங்கள் பாரதத்திற்கு விரோதிகள் அல்ல. ஆனால் பா.ஜ., இந்தியாவுக்கு விரோதி போல் நடந்து கொள்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: ஜி 20 வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் விருந்தளிக்கிறார். இந்த விருந்துக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு அழைப்பு இல்லை. இது வருந்தத்தக்கது. எந்த நாட்டிலும் இதுபோன்ற அதிசயம் நடைபெறவில்லை.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயை மதித்து உரிய மரியாதையை தந்தார். நாங்கள் பாரதத்திற்கு விரோதி அல்ல. ஆனால் பா.ஜ., இந்தியாவுக்கு விரோதம் போல் நடந்து கொள்கிறது.
இடைத்தேர்தல் வெற்றி
7 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் பாஜ., வுக்கு எதிராக மாநில கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பை அகற்றிவிட்டு, எதிர்க்கட்சிகள் பயணத்தை தொடர வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல், குறித்து அரசியல் சாசனத்தில் எளிதாக திருத்தம் செய்ய முடியாது. அதில் குறைந்த பட்சம் 5 திருத்தங்களை செய்ய வேண்டும். அந்த 5 திருத்தங்களை செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதற்கு தான், 'இண்டியா' கூட்டணியில் மாநிலவாரியாக தொகுதி பங்கீடு நடைபெறும். பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. எங்களைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்.
தென்னாட்டில் சனாதன தர்மம் என்பது ஜாதி ஆதிக்கம், பெண் இழிவு என குறிப்பிடுகிறார்கள். வடக்கே சனாதனம் என்பது இந்து மதம் தான். எனவே இந்த சர்ச்சைக்குள் காங்கிரஸ் கட்சி நுழைய விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.