புதுடில்லி: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஐ.மு., கூட்டணிக் கட்சிகளும், இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசில் இருந்து வெளியேறப் போவதாக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி மிரட்டல் விடுத்துள்ளார்.
பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, கடந்தாண்டு ஜூனில், மத்திய அரசு கைவிட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினமும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பா.ஜ., - இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளன.
இடதுசாரி கண்டனம்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கை:அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்கிறது. பணவீக்கமும் இதனால் அதிகரிக்கிறது. சமீபகாலமாக, சர்வதேச சந்தையில், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆனாலும், இங்கு பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இது நியாயமற்ற நடவடிக்கை. ஏற்கனவே பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சாதாரண மக்களுக்கு, இந்த விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மம்தா மிரட்டல்:இதற்கிடையே, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கூட்டம், அந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில், கோல்கட்டாவில் நேற்று நடந்தது. அப்போது, "பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, அரசில் இருந்து வெளியேற வேண்டும்' என, கட்சியின் பார்லிமென்ட் குழு நிறைவேற்றிய தீர்மானம், மம்தாவிடம் அளிக்கப்பட்டது.
இதன்பின், செய்தியாளர்களிடம் மம்தா பேசியதாவது:ஐ.மு., கூட்டணியில் உள்ள கட்சிகளில், காங்கிரசுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி. எங்களுக்கு 18 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். பெட்ரோல், விலை உயர்வு குறித்து, எங்களிடம் ஆலோசனை கேட்காமலேயே, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. எந்த கூட்டணி கட்சியையும் கலந்து ஆலோசிக்காமல், காங்கிரஸ் கட்சி, தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, மத்திய அரசில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். தற்போது வெளிநாடு சென்றுள்ள பிரதமர், இந்தியா திரும்பியதும் அவரிடம், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்துவேன். அதற்கு பின், அரசில் இருந்து வெளியேறுவது குறித்த, இறுதி முடிவை அறிவிப்போம்.பிரதமர் இல்லாத சூழலிலேயே, விலை உயர்வு போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது, துரதிர்ஷ்டவசமானது. மத்திய அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கும் எங்களின் அமைச்சர் தினேஷ் திரிவேதி, மக்கள் பிரச்னைகளை எழும்பும்போதெல்லாம், அவரை பேச விடாமல் செய்கின்றனர். நாங்கள் போதும் என்ற அளவுக்கு பொறுமையை கடைபிடித்து விட்டோம். காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி நடத்துவதற்கு, திரிணமுல், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் காங்கிரஸ் ஆதரவை நம்பி அரசியல் நடத்தவில்லை.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவையும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறுகையில்,"இந்த விலை உயர்வு, சாதாரண மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த விலை உயர்வுக்கு எதிராக, எங்கள் கட்சி குரல் கொடுக்கும்' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலர் தாரிக் அன்வர் கூறுகையில்,"பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது கவலை அளிக்கிறது. விலையை அடிக்கடி உயர்த்துவதை தடுப்பதற்கான, நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கிடையே, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துவது, தேர்தலில், தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக் சிங்விகாங்., செய்தி தொடர்பாளர்:"" மம்தா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களின் கருத்து குறித்து, தற்போது எதுவும் கூற முடியாது. ஆனாலும், பெட்ரோல் விலை உயர்வு என்பது, மிகவும் முக்கியமான பிரச்னை என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம்.