பொது செய்தி

தமிழ்நாடு

கடந்த ஆண்டில் ரூ.6,500 கோடிக்கு இலவச மின்சாரம்: கடனிலிருந்து வாரியம் மீள முடியுமா?

Updated : நவ 11, 2011 | Added : நவ 09, 2011 | கருத்துகள் (22)
Advertisement

தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சமமாக, இலவச மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் வெட்டு காலத்தை, அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்க அனுமதி கேட்டு, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், தமிழக மின் வாரியம் விண்ணப்பித்தது. இம்மனுவை விசாரித்த ஆணையம், டில்லியிலுள்ள மின்சார ஒழுங்குமுறை மேல்முறையீட்டு தீர்ப்பாய உத்தரவுப்படி, மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, விளக்கமான அறிக்கையை நவ., 30க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

4,000 மெகாவாட் பற்றாக்குறை: இதன்படி, தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது, 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 10 ஆயிரத்து, 237 மெகாவாட்டிலிருந்து, 18 ஆயிரத்து, 311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20 ஆயிரத்து, 152 ஆக உயரும் என, தமிழக மின் வாரியம் கணக்கிட்டுள்ளது. வரும் 10 ஆண்டுகளில், 25 ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 3,900 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தினமும், 1,000 மெகாவாட் மின்சாரம், நீர்மின் நிலையங்களால் உற்பத்தியாகிறது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு, 600 கோடி யூனிட் மின்சாரம், நீர் மின் நிலையங்களால் உற்பத்தியாகும் என்பதால், பற்றாக்குறை குறையும் வாய்ப்புள்ளது.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில் 6 மணி முதல் 9 மணி வரை, தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை இல்லாத நேரங்களில், அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்த, தொழிற்சாலைகளுக்கு சலுகைத் திட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை நேரங்களில், குறிப்பாக காலை மற்றும் மாலையில் 6 மணி முதல் 9 மணி வரை, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தருவதில்லை.

விவசாயம் ரூ.250; குடிசை ரூ.120: தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, விவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது. விவசாயத்திற்கு கடந்த ஆண்டில், 1,220 கோடி யூனிட் மின்சாரம் செலவாகியுள்ளது. மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது. மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.6,259 கோடி நஷ்டம்: யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவாவதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயத்திற்கு, 6,478 கோடி ரூபாய்க்கு இலவசமாக மின்சாரம் தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாயும், மின் பகிர்மான கசிவின் மூலம் 7,167 கோடி ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதை, அரசின் மனு வெளிப்படுத்தியுள்ளது.

நிதிச் சுமையை குறைக்க...: குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடியவில்லை. விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு, அரசு சலுகை தருவதாக இருந்தாலும், அதற்கான தொகை முழுவதையும் அரசு செலுத்தினால் தான், மின் வாரியத்தின் நஷ்டக்கணக்கு குறைவதுடன், மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவது குறையும்.

மின்வெட்டை நீட்டிக்கலாமா? பொதுமக்கள் கருத்து தேவை: மின் பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த ஜூன் வரை மின்வெட்டை நீட்டிப்பது குறித்து, பொதுமக்கள் மற்றும் மின் உற்பத்தியாளர்கள் உட்பட, தமிழக மின் வாரியத்துடன் தொடர்பிலுள்ள பயனாளிகள் அனைவரும், வரும் 30ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

- ஹெச்.ஷேக் மைதீன் -

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
16-நவ-201113:29:45 IST Report Abuse
Hasan Abdullah மின்சார துறையின் இந்த நஷ்டம் எல்லாம், இலவச மின்சாரத்தால் அல்ல, மாறாக, உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் கடின மின் வெட்டை தவிர்க்க, அதிமுகவிற்கு எதிராக வோட்டுகள் செல்லாமல் இருக்க, பல ஆயிரம் கோடி கொடுத்து அண்டை மாநிலங்களிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் மின்சாரம் வாங்கியது தான் காரணம். அந்த உண்மையெல்லாம் தினமலர் வெளியிடாது. ஏனெனில் இது அம்மா வீட்டு அம்மிக்கல் தானே.
Rate this:
Share this comment
Cancel
thamizh - திருச்சிராப்பள்ள,இந்தியா
16-நவ-201100:07:33 IST Report Abuse
thamizh வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைக்கு சலுகை விலையில் கொடுக்கப்படும் மின்சாரத்தினால் மின்வாரியத்திற்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது. அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளும் நடத்தும் தொழிற்சாலைகளால் திருடப்படும் மின்சாரத்தால் எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது. என்பதை கணக்கிட்டு பார்த்தால் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தால் ஏற்படும் வருவாய் இழப்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதை பற்றியெல்லாம் தினமலர் வாயை திறக்காது. மண்ணின் மைந்தர்களுக்கு உருப்படியான இலவசம் ஏதேனும் வழங்கிவிட்டால் தினமலர் அருமையாக கட்டுரை எழுதும்
Rate this:
Share this comment
Cancel
anwarhalwani - thiruvaarur,இந்தியா
10-நவ-201122:27:38 IST Report Abuse
anwarhalwani அன்புள்ள முதல்வருக்கு அதிகம் கூற விரும்பவில்லை, இலவச மின்சாரத்தினால் அரசுக்கு எந்த பயனும் இல்லை. நீங்கள் நன்கு ஆலோசித்து தயவு செய்து இலவச மின்சாரத்தை அடியோடு ரத்துச்செய்ய வேனுமாய் தாழ்மயுடன் வேண்டுகிறோம். மின் வாரியமும் பயன் அடையும்.. கட்டணம் செலுத்தி நுகரும் மக்களுக்கும் சம தர்மம்.. மின்வெட்டயும் வெகுவாக குறைக்க முடியும்.. அதோடு பழுதான மின் மீட்டர்களை உடனடியாக மாற்றி நுகர்வோரின் உபயோகத்தை சரியாக கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X