Hindu Endowement decides not to sell off Temple lands | கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: அறநிலையத்துறை முடிவு

Updated : நவ 13, 2011 | Added : நவ 11, 2011 | கருத்துகள் (4)
Advertisement

கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே, இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, "ஸ்வாகா' செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.


குறைந்த விலை: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால், இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், "ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம்' என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, "நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள்' என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது.


ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி, உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், "இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. ""முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது'' என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.


உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது. இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian M - Tirunelvelli,இந்தியா
17-நவ-201110:18:24 IST Report Abuse
Balasubramanian M உண்மையில் வரவேற்கத்தக்க விஷயம். இது போல் இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துகளை தனியார் வசம் இருந்து மீட்டு கோவில்களின் வருமானத்திற்கு வழி வகை செய்ய வேண்டும். இதற்கு தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து கொள்கிறேன். இது போல் எங்கள் ஊர் தளபதி சமுத்திரம் கீழூர் லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் நிலங்கள் 6 ஏக்கர் நிலங்கள் இருந்தும் கோவிலுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை தக்கார் வந்து வசூலிப்பதும் இல்லை. கோவில் எதோ கிராமத்து மக்களின் உதவியுடன் பூஜைகளும் மற்ற விசேஷங்களும் நடைபெறுகின்றது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு எந்த உதவியும் இல்லை. கோவில் சம்பந்த பட்ட ஒரு ஏக்கர் நிலம் தனியார் ஒருவர் ஆக்ரமித்து அவர் பெயரில் பட்டா மாற்றம் செய்து பயன் படுத்தி வருகிறார். இதை இந்து சமய அறநிலையத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் இதற்கு தினமலர் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய கேட்டு கொள்கிறோம். இப்படிக்கு கிராமபொதுமக்கள் மற்றும் லக்ஷ்மி நாராயண பெருமாள் பக்தர்கள் பஜனை குழு .தளபதிசமுத்திரம் கீழூர்,நாங்குநேரி தாலுகா. திருநெல்வேலி மாவட்டம்
Rate this:
Share this comment
Cancel
abdulakhil - kumbakonam,இந்தியா
13-நவ-201100:21:58 IST Report Abuse
abdulakhil நல்ல முடிவு. இதுபோல் வக்பு வாரிய சொத்துக்களும் செய்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Nava Mayam - newdelhi,இந்தியா
12-நவ-201105:18:06 IST Report Abuse
Nava Mayam உண்மையிலேயே வரவேக்க தக்கது மட்டுமல்ல அவசியமானது கூட ! முன் காலத்தில் இதை கோவிலுக்கு எழுதி வைப்பதன் மூலம் பக்தர்கள் பயன் அடைவார்கள் என்றுதான் இதை பலர் எழுதி வைத்தனர் ! அதை எழுதி வைத்த வர்களின் தலை முறையினர் இன்று வறுமையில் வாடுகின்றனர் ! ஆனால் அதை குத்தகைக்கு எடுத்தவர்கள் செல்வத்தில் த்ளைக்கின்றனர் ! இது நாம் ஆண்டவனுக்கு நாம் செய்யும் துரோகம் ! அது போல் ஒரு பெயரில் குத்தகை எடுப்போர் அவர்கள் உபயோகத்துக்கு மட்டும் உபோயோக்க்காமல் அதை இன்றைய சந்தை நிலவரத்துக்கு விற்று விடுகிறார்கள் அல்லது வாடகைக்கு விடுகிறார்கள் ! அவர்கள் உபோயோகிக்காமல் அதில் மற்றவர் குடியிருந்தால் , அதை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் , அல்லது இன்றைய வாடகையை கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வேண்டும் ! பெயர் மாற்றி குடி இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் ! இதுவும் கோவில் நில அபகரிப்புத்தான் !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X