பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: வெள்ளத்தில் சிக்கியவரின் துணிச்சல்

Added : நவ 11, 2011 | கருத்துகள் (119)
Share
Advertisement
ஒருபுறம் கழுத்து வரை வெள்ள நீர்; அதற்கு பயந்து வீட்டில் உள்ள விட்டத்தின் மீதேறி பெரியவர்களும், குழந்தைகளும் தப்பியபோது, அங்கிருந்த பாம்பு சீறியது. மரணத்தின் வாசல் வரை சென்றவர்களை, உயிரை துச்சமென மதித்து காப்பாற்றினார் முஹமது இப்ராஹிம். அனைவரையும் காப்பாற்றிய அவரை, பாம்பு கடித்ததால், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர், மங்கலம் ரோடு,
பாம்பு கடித்தும் நான்கு பேரை காப்பாற்றிய வாலிபர்: வெள்ளத்தில் சிக்கியவரின் துணிச்சல்

ஒருபுறம் கழுத்து வரை வெள்ள நீர்; அதற்கு பயந்து வீட்டில் உள்ள விட்டத்தின் மீதேறி பெரியவர்களும், குழந்தைகளும் தப்பியபோது, அங்கிருந்த பாம்பு சீறியது. மரணத்தின் வாசல் வரை சென்றவர்களை, உயிரை துச்சமென மதித்து காப்பாற்றினார் முஹமது இப்ராஹிம். அனைவரையும் காப்பாற்றிய அவரை, பாம்பு கடித்ததால், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திருப்பூர், மங்கலம் ரோடு, பழக்குடோன் அருகே கோம்பைத்தோட்டத்தை சேர்ந்த ஜேக்கப் மகன் முஹமது இப்ராஹிம் (33); சுமை தூக்கும் தொழிலாளி. கடந்த 6ம் தேதி நள்ளிரவில் நொய்யலாற்றில் வெள்ளம் வந்தது. இப்ராஹிம் வீடு கரையோரம் இருந்ததால், தனது மூன்று குழந்தைகள், மனைவி, தந்தை மற்றும் அருகில் உள்ளவர்களை மேடான பகுதிக்கு வருமாறு சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்ட பலரும், மேட்டுப்பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். இந்நிலையில், அருகிலுள்ள காயிதே மில்லத் நகருக்கும் வெள்ளம் வந்து விடும் என்பதால், அங்குள்ள உறவினர்களை காப்பாற்ற அங்கு ஓடினார் இப்ராஹிம். அங்கும் வெள்ளம் சூழ்ந்து நின்றது; மக்கள் சத்தம் போடுகின்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் குழந்தைகளும், பெரியவர்களும் சிக்கியுள்ளதாக, அருகில் உள்ளவர்கள் கூறியதை கேட்டு, இப்ராஹிம் அந்த வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள், மார்பு வரை தண்ணீர் சூழ்ந்திருந்தது. விட்டத்தில் இரு குழந்தைகளும், இரு பெரியவர்களும் உட்கார்ந்து சத்தம் போட்டனர். அவர்களை காப்பாற்ற இப்ராஹிம் முயற்சித்தபோது, அதே விட்டத்தில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சீறிக்கொண்டிருந்தது.


ஒரு கணம் யோசித்த இப்ராஹிம், விட்டத்தின் மீதேறி "சடாரென்று' பாம்பின் தலையை பிடித்தார். அதே வேகத்தில் பாம்பு, இப்ராஹிமின் இடது கை பெருவிரலை கடித்து விட்டது. உயிர்போகிற வலி ஒருபுறம், கொடிய விஷமுள்ள பாம்பு ஒரு கையில் என்ற போராடிய அவர், உடனடியாக பாம்பை தூக்கி வெளியே எறிந்தார். குழந்தைகளையும், பெரியவர்களையும் கஷ்டத்துடன் வெளியே கொண்டு வந்து சேர்த்தார். வெளியே இருந்தவர்கள், பாம்பை அடித்துக் கொன்றனர். அப்போது, இப்ராஹிம் மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளித்த சிகிச்சைக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பதால், உறவினர்கள் உதவியுடன், அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனாக, அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


உயிரை பணயம் வைத்து, நான்கு உயிர்களை காப்பாற்றிய இப்ராஹிம் மனைவி பாத்திமா கூறியதாவது: யாருக்கு எப்போது அடிபட்டாலும் முதள் ஆளாய் நின்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். வெள்ளம் வந்தபோது, எங்களது குழந்தைகளை பற்றி கூட கவலைப்படாமல், பிறரை காப்பாற்ற சென்றபோது, பாம்பு கடித்தது. இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், "அவர்கள் எவ்வாறு உள்ளனர்,' என்று கேட்கிறார். எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து மூன்று குழந்தைகளின் சான்றிதழ்கள், புத்தகம் எல்லாம் போய் விட்டன. என்ன செய்வதென்றே தெரியவில்லை. பக்ரீத் பண்டிகையின்போது இவ்வாறு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.


எனது கணவரை எப்படியாவது இறைவன் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்று கண்ணீர் மல்க பேசினார். தலைக்கு மேல் வெள்ளம் வந்தபோதும், கண்ணாடி விரியன் பாம்பு கடித்தபோதும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை காப்பாற்றி, அவிநாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஹமது இப்ராஹிமை எம்.எல்.ஏ., கருப்பசாமி உட்பட பலர் சந்தித்து, அவரது மனைவி, தந்தைக்கும் ஆறுதல் கூறினர். பல உயிர்களை மனிதநேயத்துடன் காப்பாற்றிய இப்ராஹிமை, பலரும் தொடர்ந்து பாராட்டிச் செல்கின்றனர்.


- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sitaramenv - Hyderabad,இந்தியா
19-நவ-201107:48:11 IST Report Abuse
sitaramenv மனதார ஒவ்வொரு மனிதனும் ஆழ்ந்து சிந்தித்தால் இந்த இப்ராஹீம் என்ற சுயநலமற்ற மனிதருக்குத்தான் பாரத ரத்னா கொடுக்க வேண்டும். ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டு கூவும் இந்த குரலை யார் ஆதரிப்பார்கள்......??? இறைவன் மனிதர்கள் மூலமாகத்தான் வருகிறான் என்பதற்கு இதைவிட என்ன சான்று. ?
Rate this:
Cancel
Saravana Murthy - Coimbatore,இந்தியா
18-நவ-201114:20:54 IST Report Abuse
Saravana Murthy விரைவில் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Veeran - Chennai,இந்தியா
17-நவ-201107:48:41 IST Report Abuse
Veeran இது போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. வாழ்க உங்கள் தொண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X