பொது வேலை நிறுத்தத்தால் முடங்கியது பிரிட்டன் : "திவால் ஆகும் நிலையில் இருக்கிறோம்' நிதியமைச்சர் கவலை

Added : நவ 30, 2011 | கருத்துகள் (1)
Advertisement
பொது வேலை நிறுத்தத்தால் முடங்கியது பிரிட்டன் : "திவால் ஆகும் நிலையில் இருக்கிறோம்' நிதியமைச்சர் கவலை

லண்டன் : பிரிட்டனில் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து நேற்று 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் பங்கு கொண்ட பிரமாண்ட ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் நடந்தது."வேலை நிறுத்தங்கள் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை' என பிரிட்டன் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

பிரிட்டன் தொழிற்சங்கங்கள் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து நேற்று ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி மொத்தம் 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பொது வேலை நிறுத்தம் நேற்று பிரிட்டனை ஸ்தம்பிக்க வைத்தது. நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான பேரணிகள் நடந்தன. பள்ளிகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்து, விமானச் சேவைகள் என அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கிப் போயின.

ஸ்காட்லாந்தில் மூன்று லட்சம் ஊழியர்களும், வேல்சில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களும், இங்கிலாந்தில் நான்கு லட்சம் மருத்துவத் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்த வேலை நிறுத்தத்தில் நாட்டின் 22 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

வடக்கு அயர்லாந்தில் பஸ், ரயில்கள் ஓடவில்லை. ஸ்காட்லாந்தில் நேற்று நடக்க இருந்த மூவாயிரம் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை. மருத்துவ ஆலோசனைக்கான ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

வேலை நிறுத்தம் குறித்து நேற்று பேசிய நிதித் துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன்,"இந்த வேலை நிறுத்தம் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் செய்யும். இதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் எடுக்காவிடில் பிரிட்டன் திவாலாகிவிடும்' என்றார்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஈத் மிலிபண்ட்,"செய்ய முடியாத ஒன்றை தாங்கள் செய்ய வேண்டும் என அரசு தங்களை நெருக்குவதாக ஊழியர்கள் கருதுவதால் தான், வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டனர். இதனால், பாதிக்கப்படும் மக்களுக்காக நான் வருந்துகிறேன்' என்றார்.

எதற்கு வேலை நிறுத்தம்? : பிரிட்டனில், மொத்தம் இரண்டு கோடியே 90 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களில் இரண்டு கோடியே 30 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் உள்ளனர். மீதமுள்ளோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

* தனியார் நிறுவனங்களில் உள்ளோரில், 32 லட்சம் பேர் மட்டுமே, ஊழியர், நிறுவனம் இணைந்து செலுத்தும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். 64 லட்சம் பேர் தனிப்பட்ட முறையில் ஓய்வூதியத்திற்காக பணம் செலுத்தி வருகின்றனர்.

* ஓய்வூதிய நிதிக்கான தேசியக் கூட்டமைப்பின் கணக்குப் படி, ஒரு பொதுத் துறை ஊழியர் ஆண்டு ஒன்றுக்கு 5,600 பவுண்டும், ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஆண்டு ஒன்றுக்கு 5,860 பவுண்டும் ஓய்வூதியமாகப் பெறுகின்றனர். ஆனாலும், இந்தக் கணக்கில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

* ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரிட்டன், பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.

* சமீபத்தில் அரசு வெளியிட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தின்படி, பொதுத் துறை ஊழியர்கள், தங்கள் ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் இருந்து கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும்; அதற்காகக் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும்; தற்போது, ஒரு பொதுத் துறை ஊழியர் ஓய்வு பெறும் போது பெறும் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியம் இனி, அவரது பணிக்காலத்தின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

* இந்த சீர்திருத்தங்களுக்கு அரசு சொன்ன காரணம், ஓய்வூதிய தாரர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதால், அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை என்பதுதான்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - Vedaraniyam,இந்தியா
01-டிச-201119:24:19 IST Report Abuse
mohan நம்ம நாடு ஒழுங்க இருந்தா தான் நம்ம அவனுகள யதாவது கேக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X