இலவச கட்டாய கல்வி வழங்க விதிகள் எதிர்த்து கத்தோலிக்க டயோசிஸ் வழக்கு| இலவச கட்டாய கல்வி வழங்க விதிகள் எதிர்த்து கத்தோலிக்க டயோசிஸ் வழக்கு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலவச கட்டாய கல்வி வழங்க விதிகள் எதிர்த்து கத்தோலிக்க டயோசிஸ் வழக்கு

Added : டிச 01, 2011 | கருத்துகள் (1)
Share

சென்னை:குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டப் பிரிவுகள், விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.சென்னை-மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்க ஆர்ச் டயோசிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த விதிகள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில், இது குறுக்கிடுகிறது. மாணவர்கள் சேர்க்கை, பள்ளிகளை நிர்வகிப்பதற்கான குழு அமைப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, நியாயமான கட்டணம் நிர்ணயிப்பது ஆகிய உரிமைகளில், இந்த விதிகள் தலையிடுகின்றன.


இந்தச் சட்டமானது, கல்வித் தரத்தை கீழே கொண்டு வருவது மட்டுமல்லாமல், கல்வித் தரத்தை மேம்படுத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் குறுக்கீடும் செய்கிறது. எங்கள் ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, எங்களிடம் இருந்து பறிக்கிறது.அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், 25 சதவீத இடங்களை அடித்தட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, சட்டத்தில் நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையை, சிறுபான்மை நிறுவனங்களிடம் இருந்து, அரசு பறிக்க முடியாது.
எனவே, இலவச, கட்டாயக் கல்விச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் மற்றும் விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவை செல்லாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X