காரைக்குடி:"தமிழ்மொழி' ஒலிவடிவமாகவும், வரி வடிவமாகவும், பின் மொழி வடிவமாகவும் உருமாறியது. இம்மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் காரைக்குடியில் "தமிழ்த்தாய்' கோயில் உள்ளது. ச.கணேசன் முயற்சியில், காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் தமிழ்த்தாய்க்கு வலப்புறம் ஒலித்தாய், இடப்புறம் வரித்தாய்க்கென தனித்தனி சிலை அமைந்துள்ளன. உள்ளே தமிழ்த்தாய் முழு உருவச்சிலை உள்ளது. இதன் கீழ் வலதுபுறத்தில் அகத்தியர், இடதுபுறத்தில் தொல்காப்பியர் சிலைகள் உள்ளன. சுற்றுப்பிரகாரத்தில் திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் என மூவருக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
பெரும்பாலான, கோயில்களில் சுவாமி ஆயுதங்களை கையில் ஏந்தியிருப்பது போல் காணப்படும். ஆனால், இக்கோயிலில் தமிழ்த்தாய் கடவுள் ஐம்பெரும் காப்பியங்களை அணிகலன்களாக சூடியிருக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இக்கோயில் அரசு நிதி ரூ. 5 லட்சம் செலவில் 1975ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 18 ஆண்டுகள் கழித்து 1993ல் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி, கம்பன் கழகம் சார்பிலும், தை மாதம் பொங்கலையொட்டி தமிழ்த்தாய் கலைக்கூடம் சார்பிலும் மூன்று நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.தமிழ்த்தாய் கலைக்கூட தலைவர், சே.அறிவுடைநம்பி கூறுகையில், "" 10 ஆண்டுகளாக தொடர்ந்து விழா நடத்தி வருகிறோம். தமிழ்தாய்க்கு வெள்ளி நாணயம் வெளியிட்டுள்ளோம். ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டுகளை பறை சாற்றும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகின்றன. தமிழ் ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்துள்ள இந்த கோயில் சுற்றுப்பிரகாரம் முற்றுப்பெறாமல் உள்ளது. இதை சீரமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்,'' என்றார்.