சேலை முந்தானையை தலைக்கவசமாக கட்டி, பெண்கள் வரிசையாக நின்று, கேள்விக்குறி
போல் வளைந்த அரிவாளுக்கு இணையாக, வளைந்து நெற்கதிர்களை அறுவடை செய்த
காட்சி, இன்று அபூர்வமாகி விட்டது. இன்று வயலும், வாழ்க்கையுமான இயற்கை
அழகு மறைந்து, இயந்திரத்தோடு இணைந்து விட்டது விவசாயம்.
இடுபொருள் விலை உயர்வுஉரம் விலை அதிகரிப்பு, நெல் விலை குறைவு, விவசாய
பணிக்கான ஆட்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு மானியம்
கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சென்னை அருகே திருவள்ளூர்
மாவட்டப் பகுதிகளில் உள்ள மொத்த விவசாய நிலங்களில், 55 சதவீத பகுதிகளில்
மட்டுமே தற்போது விவசாயம் நடந்து வருகிறது. மழை வெள்ள இயற்கை சீற்றத்தால்,
மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த
பகுதிகளில், மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக பல ஏக்கர் பயிர்கள் சரிந்து
வீழ்ந்தன.குறைந்த கூலியால் மறுப்புகுறைவான கூலி மற்றும் சேறு, சகதியுடன்
அறுவடையின் போது பயிர்களின் உதிரியான வைகோல் "சுனை' (அரிப்பு) ஆகியவற்றை
விரும்பாத கிராமத்தினர் நாற்று நடுதல், அறுவடை போன்ற விவசாயப் பணிகளுக்கு
வருவதில்லை.
இதனால், சில ஆண்டுகளாக நெல் அறுவடைக்கு பெல்ட் இயந்திரங்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு வாடகை ஒரு மணி நேரத்திற்கு 1,600 முதல்
1,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சேறு, சகதி கலந்த ஈரமான வயல்களில்
நடக்கும் அறுவடைகளில், இரும்பு கவச சக்கரங்களுடன் கூடிய பெல்ட்
இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவை ராணுவ வாகனம் போல் தடையின்றி
முன்னேறிச் சென்று, நெல் அறுவடை செய்கின்றன. காய்ந்த நிலங்களில்
டிராக்டருடன் இணைக்கப்பட்ட இயந்திரம் மூலமும் அறுவடை செய்யப்படுகின்றன.
அவற்றுக்கான வாடகை பெல்ட் இயந்திரங்களை விட, 200 அல்லது 300 ரூபாய் வரை
குறைவு.
இயந்திர அறுவடையால் பணிகள் விரைவாகவும், நெல் மணிகள் வீணாகாமலும்
விவசாயிகளுக்கு கிடைக்கிறது. சராசரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர்
அளவில், இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து விட முடியும். ஆட்கள் மூலம்
செய்தால் ஒரு நாளாகும். இதனால், விவசாயிகளிடம் இயந்திரப் பணிக்கு வரவேற்பு
அதிகரித்துள்ளது.எங்களை கொஞ்சம் கவனீங்க...பெரியபாளையம் வடமதுரை
கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காட்டய்யன் கூறியதாவது: தனியார் நிறுவனம்
மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை ஆகியவற்றின் மூலம் சிரமம் அற்ற எளிதான
வருவாய் கிடைப்பதாலும், "டிவி' தொடர்களின் போதையாலும் நடவு, அறுவடை போன்ற
வேலைகளை செய்ய கிராமத்தினர் விரும்புவதில்லை.நெல் கொள்முதல் விலையை விட,
அதற்கான உரம் விலை அதிகமாகி விவசாயிகளை பாதிக்கிறது. உதாரணமாக ஒரு மூட்டை
(76 கிலோ) நெல் விலை 800 முதல் 900 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. ஒரு
மூட்டை (50 கிலோ) டி.ஏ.பி., உரத்தின் விலை 1,000 ரூபாய்.
விவசாயத்திற்காக அரசு வழங்கும் மானியம் பெரிய விவசாயிகளுக்கு தான்
கிடைக்கிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. ஒரு ஏக்கர்
மற்றும் அதற்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் பயிர்களுக்கு உரம்
வாங்கக்கூட முடியாத நிலை உள்ளது. ஆனால், அரசு வேளாண்மைத் துறை அதிகாரிகளோ,
இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று மறுத்து
விடுகின்றனர்.மானியம் என்பது பாரபட்சமற்ற வகையில், அனைத்து
விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். மண் வளத்திற்கு ஏற்றபடி, ஒரு
ஏக்கருக்கு 20 முதல் 40 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கிறது. இந்த
பிரச்னைகளால், தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல், விவசாய நிலங்களை விற்று
விடுகின்றனர். நாங்கள் ஒரே ஒரு நெல் மணியைக் கூட வீணாக்க மாட்டோம். ஆனால்,
நெல் மார்கெட்டில் சேம்பிள் எடுக்கிறோம் என்ற பெயரில், நெல்
இடைத்தரகர்களும், அரிசி வியாபாரிகளும் தாராளமாக வீணடிக்கின்றனர்.இதுபோன்ற
பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் நசிந்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளை
வாழ்வை சீர்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு காட்டய்யன்
கூறினார்.