புதுடில்லி: "சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவாரா என்பது குறித்து வாதபிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது, ருஷ்டியின் வருகை குறித்து மாநில மக்களின் உணர்வுகளை மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. மாநில மக்கள் அவர் வருவதை விரும்பவில்லை. எந்த மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை விரும்பாது. மாநில உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டேன்' என்றார். இந்நிலையில், விழா அமைப்பாளர் சஞ்ஜோய் ராய் கூறுகையில், "ருஷ்டி பயண திட்டத்தில் மாறுதல் காரணமாக, வரும் 20ம் தேதி அவர் இந்தியா வரமாட்டார்' என்றார். இவ்விழா குறித்தான வலைதளத்திலும், நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ருஷ்டி, இவ்விழாவில், 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உரையாற்றுவதாக இருந்தது.