தூத்துக்குடி: ""முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்''என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர். கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின்உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன், உண்ணாவிரதம் நடந்தது. சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை வகித்தார். தேவர் பேரவை தலைவர் சேதுராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி, சமுதாய தலைவர்கள், அணுஉலை ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்களை திசைதிருப்ப முயற்சி: இதில், சந்திரன் ஜெயபால் பேசியதாவது: முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகஉள்ளது. அதனால் ஆபத்துஎன, கேரளமுதல்வர் உம்மன்சாண்டி கூறுகிறார். அதுபோல, கூடங்குளம் அணுமின்நிலையத்தால் பேராபத்து எனக்கூறி மக்களை திசைதிருப்ப இங்குள்ள உம்மன்சாண்டி நினைக்கிறார். மக்களுக்கு மின்சாரம் மிக அவசியம். ஆனால், இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்கின்றனர்.
ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒருபகுதிமக்களின் அச்சம் தீரும்வரை, இங்கு அணுமின் உற்பத்தியை துவங்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.ஆனால், இந்த அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்கப்படுமா? என தற்போது பெரும்பாலான மக்களிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சட்டசபையைக்கூடி, மக்கள் அச்சம் தீர்ந்துவிட்டதால், இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதல்வர்
ஜெ.,நினைத்தால் இந்த அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை
துவங்கிவிடலாம். அவ்வாறே பொதுமக்களும் கருதுகின்றனர். அதை அவர் உடனடியாக
செய்யவேண்டும். ஏனெனில், தொழில்வளர்ச்சி, விவசாயம், எதிர்கால
சந்ததியினருக்கு மின்சாரம் அவசியம். மின்சாரம் இல்லையென்றால் தமிழகம்
இருளில்மூழ்கிவிடும். காமராஜர் ஆட்சிகாலத்தில் கல்பாக்கம் அணுமின்நிலையம்,
தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டு பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.
அன்று அதற்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அவர் பின்வாங்கியிருந்தால், இந்த
அற்புத திட்டங்கள் நமக்கு கிடைத்திருக்காது.
யாருக்குமே திருமணம் நடக்காது: அணுமின்நிலையம் குறித்த சந்தேகம் என்ற
பெயரில் நாட்டின்பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை
போராட்டக்குழுவினர் கேட்கின்றனர். அணுமின்நிலையத்தால் எந்தபாதிப்புமில்லை
என முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதையும் ஏற்கமறுக்கின்றனர்.
பிரசவத்தின்போது இறப்போம் என பெண்கள் பயப்பட்டால், இவ்வுலகில் யாருக்குமே
திருமணம் நடக்காது. அணுமின்நிலைய எதிர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து 54
கோடி ரூபாய் வந்தது குறித்த குற்றச்சாட்டை இதுவரை அவர்கள் மறுக்காதது ஏன்?
போராட்டக்காரர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து,
அவர்களிடம் உரியவிசாரணை நடத்தவேண்டும். இந்த
அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பேசிய அனைவருமே இதே கருத்தை வலியுறுத்தினர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தீர்மானம் : கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அணுஉலை ஆதரவு உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தடுத்து, அன்னிய நாட்டு நிதியுதவியுடன்
4 மாதத்திற்குமேல் போராட்டம் என்ற போர்வையில் அப்பாவிமக்களை பகடைக்காயாக்கி, தூண்டி, நாட்டின்பாதுகாப்பு ரகசியங்களையும், அணுஉலை வரைபடம் மற்றும் செயல்திட்டங்களைக்கேட்டு, இந்தியாவுக்கு அச்சத்தை கொடுப்பவர்களை நாட்டின்பாதுகாப்புகருதி, தேசிய பாதுகாப்புசட்டத்தை பயன்படுத்தி, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை கோருகிறோம்.
* கூடங்குளம் பகுதிமக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உயர மீனவர்களுக்காக புதிய மீன்பிடித்துறைமுகம், மத்திய அரசின்
நேரடிகட்டுப்பாட்டுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மீன்வளர்ச்சித்துறை சார்ந்த கல்லூரியும், மக்கள் அனைவரும் பயன்பெற
கல்விநிலையங்களும், உயர் தொழில்நுட்ப கல்லூரியும், மருத்துவக்கல்லூரியும்
அமைக்க கோருகிறோம்.
* தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அனைத்து தொழில் வளர்ச்சிக்கும், மிகுந்த துணைநிற்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலைவாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட மத்திய அரசை
கோருகிறோம்.
* அணுசக்தித்துறை முழுக்க முழுக்க பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்
இருக்கும்நிலையில், கூடங்குளம் அணுமின் உற்பத்தி தாமதத்தால் அணுசக்தியின்
ஆக்க வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு கட்டுப்பாட்டை
அணுசக்தித்துறை இழந்து நிற்பது போன்ற தோற்றம் மக்களிடையே எழுகின்றது. நாட்டின்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்திட்டத்தில் முக்கிய பங்காற்றும் அணுசக்திதுறையின் செயல்திறன் கேள்விக்குறியாக போகும்முன், இந்திய ஜனாதிபதி உடனடியாக பார்லி.,யை கூட்டி முடிவெடுக்க கோருகிறோம்.
*மத்திய, மாநில அரசுகளின் இணக்கமற்ற போக்கே, கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்தி தடங்கலுக்கு காரணம் என பாமரர்களும் பேசும்நிலை, தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களின் அச்சமெல்லாம் மின்வெட்டைப்பற்றியதுதான். விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும், இளைஞர்களும் அச்சப்படுவது உயிர்பயத்திற்காக அல்ல. மேற்கண்ட தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் முடங்கிவிட்டால், அத்தொழில்களின் உற்பத்தி மட்டுமல்ல, அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் குடும்பமும் வருமான இழப்பால் கடன்தொல்லை ஏற்பட்டு மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என நடுங்கிக் கொண்டிருக்கிற மக்களின் அச்சத்தைப்போக்க, மத்திய, மாநில அரசுகள் விட்டுக்கொடுத்து, உருவாக்கப்பட்ட போலி உயிர்பயத்தில் இருக்கிற மக்களையும் மீட்டு, உண்மையான வாழ்க்கை பயத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் காக்க கோருகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.