தமிழ்நாடு

வாழ்வை பாழாக்கும் மின்வெட்டால் வேலை நேரம் அதிகரிப்பு

Added : பிப் 11, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement
அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனி, இரும்பு கம்பெனி என, 1,500 கம்பெனிகள் இயங்குகின்றன. அதுமட்டுமின்றி 1,600 கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை
வாழ்வை பாழாக்கும் மின்வெட்டால் வேலை நேரம் அதிகரிப்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனி, இரும்பு கம்பெனி என, 1,500 கம்பெனிகள் இயங்குகின்றன. அதுமட்டுமின்றி 1,600 கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். தொழில் நுட்ப நிறுவனங்களில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, குறுந்தொழில் கம்பெனிகள் ஈடுபடுவோர் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருமாக, 15 கி.மீ., சுற்றளவு உள்ள அம்பத்தூர் எஸ்டேட்டில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில், மின்சார தட்டுப்பாட்டால் கடும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மின்சார தட்டுப்பாடு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காலை, மதியம், மாலை என்ற அளவில் மூன்று ஷிப்டுகளாக இயங்கி வந்த தொழிற்சாலைகள், கடும் மின்சார தட்டுப்பாட்டால் ஒரு ஷிப்டாக குறைந்துள்ளது. மூன்று மடங்கு உற்பத்தி ஒரு மடங்காக குறைந்ததால், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும், உதிரி பாகங்களை உற்பத்தி செய்து அனுப்பும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தற்போது உள்ளூர் கம்பெனிகளுக்கு போதுமான உதிரி பாகங்களை அனுப்ப இயலாத நிலை உருவாகியுள்ளது. மின்வெட்டால் அம்பத்தூரில் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன.


கட்டுப்படியாகாத ஜெனரேட்டர் கட்டணம்
மின்தடையால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பல்வேறு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தி, அதன் மூலம் இடைக்கால மின்சாரம் பெறுகின்றனர்.
ஜெனரேட்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்குபவர்கள், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், நாள் முழுவதும் ஜெனரேட்டர்களுக்கு வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால், தாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் உதிரி பாகங்களினால் கிடைக்கும் லாபத்தை விட, ஜெனரேட்டர்களுக்கு கொடுக்கும் வாடகை பணத்தின் அளவு அதிகரிக்கிறது.
எனவே, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் உதிரி பாகங்களின் உற்பத்தியால் வரும் லாபத்தை ஜெனரேட்டர்களுக்கு வாடகை கொடுத்து விட்டு, தொடர்ந்து தொழில் நடத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


வேலை நேரம் அதிகரிப்பு
மின்தடை ஏற்படுவதால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக வேலை நடத்த இயலாத சூழ்நிலையில் உள்ளனர். காலை, மதியம், மாலை என்ற கால அளவின் அடிப்படையில் தொழில் செய்பவர்கள், மின்தடையால் முறையை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால், குறிப்பிட்ட கால அளவுக்கு வேலைக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் அடிக்கடி நேரத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.


அழியும் நிலையில் குறுந்தொழில்
குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய கம்பெனிகளில் இருந்து மூலப்பொருட்களை பெற்று, உதிரி பாகங்களை செய்து கொடுத்த இரண்டு மாதங்களுக்கு பின் அதற்கான கட்டணத்தை பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து தர முடிவதில்லை. ஆர்டர்கள் கைவிட்டுப் போகும் போது வட்டிக்கு கடன்கள் வாங்கி தொழில் நடத்துகின்றனர். தொடர் மின்வெட்டால், உற்பத்தி பொருட்களை வழங்க முடியாமல், பல்வேறு குறுந்தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன. கடனுக்கான வட்டி அதிகரிப்பதால் தொடர்ந்து நிறுவனங்களை நடத்த முடியாமல் நிறுவனத்தை மூடுகின்றனர்.


சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெளிமாவட்டங்களில் இருந்து தொழில் செய்கிறவர்கள் அதிகம். தொடர் மின்வெட்டுப் பிரச்னையால் கடந்தாண்டு 500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் நட்டத்தை சமாளிக்க முடியாமல் இழுத்து மூடினர். இதனால், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் திண்டாடி வந்தனர்.
கம்பெனிகள் இழுத்து மூடப்படுவதால், வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். வேறு வழியின்றி மீண்டும் சொந்த ஊருக்கே செல்கின்றனர். மின்வெட்டு பிரச்னையை தீர்ப்பது மட்டும் தான் இந்த பிரச்னை தீர ஒரே வழி.


காணாமல் போகும் உற்பத்தி
ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின் தடையும், பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடையும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிலவுவதால், கைத்தொழில், குறுந்தொழில், சிறுந்தொழில் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் செய்து கொடுக்க வேண்டிய பணிகள் கடுமையான மின்தடையால் அறவே பாதிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் உள்ளிட்ட கம்பெனிகளில் 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்படுகிறது.


அரசு கவனம் செலுத்த வேண்டும்
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அய்யப்பன்: அம்பத்தூரில் தினமும் ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்படுகிறது. இதனால், கட்டாயம் ஜெனரேட்டர் இயக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி வருகிறோம். தெற்கு ஆசியாவில் மிகப்பெரும் தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடுமையாக உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஜெனரேட்டர்களை இயக்கி, மின்வெட்டை சமாளித்து வருகின்றன.
ஆனால், அம்பத்தூரில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறது. உதிரி பாகங்களை சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுத்தால் தான், பெரிய நிறுவனங்கள் செயல்பட முடியும். கடும் மின்வெட்டினால் இந்நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.
குறுந்தொழில்கள் வணிகத்தின் அடிப்படை. அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் கட்டடம் ஆட்டம் கண்டு விடும். அதுபோலத் தான் தற்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே, அரசு மின்வெட்டு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.


கண்டுகொள்ள யாருமே இல்லை
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் ஏ.எஸ்.கண்ணன்:மின்வெட்டால் கம்பெனிகள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. கைத்தொழில்கள் செய்வதற்கு குறைந்த அளவு முதலீடு போதும். ஆனால், அதைக் கூட சொந்த செலவில் செய்ய இயலாத ஏழை மக்கள் தங்களால் முடிந்த அளவு கைப்பணத்தை செலவழித்து மற்றவற்றை வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.
மின்சாரம் மட்டுமே கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்களுக்கு பிரதானம். தினமும் அம்பத்தூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல நேரமாக தொடர்வதால், அவர்களால் கம்பெனிகளை தொடர்ந்து நடத்த முடிவதில்லை.
வேறு வழியில்லாமல் ஜெனரேட்டர்களை வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதனால், பெரிய அளவில் நட்டம் ஏற்படுகிறது.
சிறிய அளவில் நிறுவனம் நடத்தும் முதலீட்டாளர்களுக்கு ஜெனரேட்டர்களுக்கு கொடுக்கும் வாடகை கட்டணம் பெரும் இடியாக விழுகிறது. அதனால், அவர்களுடைய முதலீட்டில் பெரிய சரிவு ஏற்படுகிறது.
அந்த சரிவை சீர் செய்ய இயலாமல் தள்ளாட்டம் அடைகிறது. இதனால், தொடர்ந்து தொழில் நடத்த இயலாத நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர். அம்பத்தூரில் ஒவ்வொரு நாளும் பல குறுந்தொழில் மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன.


கழுத்தை நெரிக்கும் கடன்
தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க பொதுச் செயலர் மூர்த்தி: அம்பத்தூரில் கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை நடத்துவோர் பெரிய பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அவர்களே முதலாளி; அவர்களே தொழிலாளி. குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய தொழிற்சாலைகளுக்கு அச்சாரமாக அமைகிறது.
இங்கு உற்பத்தி செய்து அனுப்பப்படும் உதிரி பாகங்களை வைத்து பெரிய நிறுவனங்கள், தங்கள் தேவையை பூர்த்தி செய்கின்றன.


தற்போது அம்பத்தூரில் ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடையாகவும், பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டாகவும் தொடர்கிறது. இதனால், கடும் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது.
தொழில் துவங்குவதற்கு கையில் பணம் இன்றி, தொழில் முனைவோர் பிற இடங்களில் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். பெரிய கம்பெனிகளிடம் இருந்தும் ஜாப் ஆர்டர்களை பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
ஜாப் ஆர்டர்களை பெற்ற குறுந்தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உதிரி உற்பத்திப் பொருட்களை செய்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது.
இதனால், கிடைக்கிற ஜாப் ஆர்டர்களை பெரிய நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்கின்றன. குறுந்தொழில்களுக்கு வேலை கிடைக்காமல் கடனில் மூழ்குகின்ற துர்நிலைக்கு ஆளாகின்றன. கடன் கொடுத்தவர்கள் வட்டியும், முதலுமாக திரும்ப கேட்கும் போது குறுந்தொழில் முதலீட்டாளர்களால் கொடுக்க முடிவதில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
ஒரு கட்டத்தில் கொடுத்த கடனுக்கான வட்டி முதலீட்டை விட அதிகமாகிறது. அதனால் தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் தொழில் முனைவோர் திண்டாடுகின்றனர்.
வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கடன் திரும்ப வாங்க முடியாது என்ற நிலை வரும் போது கம்பெனியை இழுத்து மூடி விட்டு, அங்கிருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
இதனால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.


- அ.ப.இராசா -


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abcd karuna - chennai,இந்தியா
18-பிப்-201206:59:24 IST Report Abuse
abcd karuna ஜகன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
Rate this:
Cancel
Jegan - chennai,இந்தியா
13-பிப்-201217:20:56 IST Report Abuse
Jegan முறையாக தொழில் செய்தால், பெரிய கம்பெனி ஆர்டர் களுக்கு LC என்னும் letter of credit பெற்றால் வங்கி கடனுடன் எளிதில் job order களை முடிக்கலாம். அப்படி செய்யும் பொது அனைத்து வரிகளையும் முறையாக கட்ட வேண்டி வரும். அதை மிச்சம் செய்ய, தனியாரிடம் கடன் பெற்றால் இப்படித்தான் ஆகும். மேலும் மின்வெட்டால் வருவாய் இழப்பு பற்றி பேசும் தெற்காசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டைக்காரர்கள், தங்கள் ஏரியாவை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று கேளுங்கள். இந்த தொழில் பேட்டைக்குள் எந்த ஒரு (சிறிய, பெரிய , நடுத்தர ) நிறுவன முதலாளியாவது தன குடும்பத்தாரை அழைத்து சென்று காட்ட ஆசைப்பட்டிருக்கிறானா. முடியாது. ஏன் என்றால் அவ்வளவு கேவலமாக உள்ளது அந்த பகுதி. வேலை செய்யும் தொழிலாளிக்கு பாதுகாப்பு நடவடிக்கை கள் எத்தனை கம்பெனிகள் வழங்குகின்றன என்றால் தேடினாலும் கிடைக்காது. சாலை எங்கும் அழுக்கு, மேக சைஸ் சாக்கடைகள், நடந்து செல்லவோ வாகனத்தில் செல்லவோ அருகதை அற்ற சாலைகள். உலகிலேயே மிக மோசமான pollution . காசு சம்பாதிக்கும் போது இவற்றை எல்லாம் சரி செய்ய முடியவில்லை. pollution control board நடவடிக்கை எடுத்தால் காசு கொடுத்து சரிக்கட்டுவார்களே தவிர, சுத்தமாக வைத்துக்கொள்ள முயலுவதில்லை. சென்னயின் ஒட்டுமொத்த pollution ல் பெரும்பகுதி இத்தகைய தொழில் பேட்டை களில் இருந்துதான் வருகிறது. இது போதாது என்று அருகில் உள்ள விவசாய நிலங்களில் வேறு சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் தொழிற்ச்சாலைகள் பல. உதாரணம் : கோளடி, கொண்ராஜகுப்பம், மேல் அயனம் பாக்கம் பகுதிகளில் உள்ள காலி இடங்களிலும் விவசாய நிலங்களிலும் இந்த தொழிற்ச்சாலைகளில் இருந்து வரும் பெரிய பெரிய இரும்பு பொருட்களின் மீது உள்ள துரு நீக்கப்பட்டு வண்ணம் பூசும் தொழில் எவ்வித மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கை களும் இல்லாமல் தங்கு தடை இன்று நடக்கிறது. இவற்றில் கொளுத்த லாபம் வேறு. வேலம்மாள் வித்யாலாவை சுற்றி பள்ளி என்றும் பாராது கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கிருந்து வருவது தான். லாபம் வரும் போதும் மாசு படுத்தும் போதும் அக்கறை இல்லாதவர்கள் இப்போது முதலைக்கண்ணீர் விடுகிறார்கள். இங்கே தொழில் குறைந்து நஷ்ட மடைந்தால் சென்னை பொலிவுபெறும். இந்த ஒரு காரணத்துக்காகவே 24 மணிநேர மின்வெட்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். . தினமலர் ஒரு முறை சென்று சிறப்புக்கட்டுரை வெளியிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X