மதுரை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடங்களை, மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என, அத்திட்டத்தின் இணை இயக்குநர் கார்மேகம் தெரிவித்தார்.தென் மாவட்டத்தில் 2009-2010ல் தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.தென் மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இணை இயக்குநர் கார்மேகம் தலைமை வகித்தார். தென் மாவட்டத்தில் 63 பள்ளிகளில் நடந்து வரும் புதிய கட்டடப் பணிகளை, மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள், செலவு போன்றவை விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயசந்திரன், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன், ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாசானம் மற்றும் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.