சென்னை : காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, த.மு.மு.க., வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவம் அத்துமீறி செயல்படுவதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.ஜவாஹிருல்லா பேசியதாவது:காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன.
பாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் காரணமாக, மனித உரிமைகளை கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.பத்திரிகைகள் நான்கு நாட்களாக வெளிவரமுடியாத நிலை உள்ளது. "காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க புதுமையானத் தீர்வுகளை நாம் காண வேண்டும்' என்று நம் பிரதமர், காஷ்மீர் பயணத்தின்போது கூறினார். அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது.காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள மித மிஞ்சிய அரசுப் படைகளை வாபஸ் பெற வேண்டும். ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், ரஹமதுல்லா, ஜுனைது, ஜெயினுலாபுதீன், யாசீன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.