தமிழ்நாடு

மின்வெட்டால் நார் உற்பத்தி கடும் பாதிப்பு: கூடங்குளம் திட்டம் கொண்டு வர வலியுறுத்தல்

Added : பிப் 20, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி :மின்வெட்டு காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வேலை நேரம், ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.நார் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அதிகளவில் கிடைப்பதால் கோவை மாவட்டத்தில் நார்

பொள்ளாச்சி :மின்வெட்டு காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வேலை நேரம், ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நார் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அதிகளவில் கிடைப்பதால் கோவை மாவட்டத்தில் நார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தென்னை நாரில் இருந்து, நார் கயிறு, கல்டு காயர் (முறுக்கு ஏற்றப்பட்ட நார்), தரைவிரிப்புகள், மிதியடிகள், வீட்டு உபயோக பொருட்கள், நார் துகள், நார் துகள் கட்டிகள் உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 1,200 நார் தொழிற்சாலைகள் உள்ளன. அதில், கோவை மாவட்டத்தில் மட்டும் நான்கில் ஒரு பங்கு நார் தொழிற்சாலைகள் உள்ளன. நார் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சம் 100 எச்.பி., முதல் அதிகபட்சமாக 140 எச்.பி., வரையிலும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நார் தொழிற்சாலைகள் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரை பகல் "ஷிப்ட்' ஆகவும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை "நைட் ஷிப்ட்டாகவும்' இயக்கப்படுகின்றன.


சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் நார் தொழில் பாதித்துள்ளது. மின்வெட்டால் நார் உற்பத்தி பாதித்து, தொழில் நசிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பகலில் ஆறு மணி நேரமும் இரவில் ஆறு மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்வெட்டால் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன் ஏற்றுமதி வாய்ப்புகளும் பாதிக்கிறது.
ஒரு நார் தொழிற்சாலையில் ஒரு ஷிப்டுக்கு குறைந்தபட்சம் 20 ஆட்கள் வேலை செய்கின்றனர். மின்வெட்டால், தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சராசரி நார் உற்பத்தியில் 60 சதவீதம் பாதித்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய்க்கான உற்பத்தி இழந்துள்ளதாகவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மின்வெட்டை போக்க உடனடி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது, கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது நார் தொழிற்சாலை உரிமையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.


நார் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமச்சந்திரன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் 350 நார் தொழிற்சாலைகள் உள்ளன.
பெரும்பாலான தொழிற்சாலைகளில் நார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
ஒருசிலர் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதுதவிர நார் துகள் கட்டிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு ஷிப்டுக்கு 2.75 டன் நார் உற்பத்தி செய்ய முடியும். மின்வெட்டு காரணமாக தற்போது ஒரு டன் நார் கூட உற்பத்தி செய்ய முடிவதில்லை. மூன்று மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கட்டாயம் வழங்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியான நிலையால் பல நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நார் தொழிலுக்கு பிப்., முதல் ஜூன் வரை தான் சீசன். இந்த நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது நார் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்கள் வேலை இழப்பு, நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு பிரச்னைக்கு அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டால் தான் நார் தொழிலை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு, ஜெயராமச்சந்திரன் கூறினார்.


கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க செயலாளர் இளங்கோ கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 350 நார் தொழிற்சாலைகள் மூலம் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் டன் அளவுக்கு நார் பொருட்கள் தினமும் உற்பத்தி செய்யப்பட்டது. கோவை மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நார் தொழிலுக்கு மின்தடை மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தினமும் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் ஆறு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை. மின்வெட்டால், 60 சதவீத உற்பத்தி பாதித்துள்ளது. தினமும் 600 டன் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. மின்வெட்டால் தினமும் 80 லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய்க்கான நார் உற்பத்தி பாதித்துள்ளது.
மின்வெட்டால் நார் உற்பத்தி மட்டுமின்றி வர்த்தகம், ஏற்றுமதி பாதிக்கிறது. மின்வெட்டு நீங்கினால் தான் நார் தொழில் சிறப்பாக நடக்கும். மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க வாரம் இரண்டு நாள் மின்விடுமுறை திட்டத்தை அரசு பரிசீலனை செய்யலாம். தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு நாளுக்கு பதிலாக இரண்டு நாள் விடுப்பு கொடுத்து, ஐந்து நாட்கள் தொழிற்சாலையை இயக்க முடியும்.
மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண, கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அணு ஆய்வு குறித்து முழுமையாக அறிந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம், அணுமின் திட்டத்தை ஆய்வு செய்து, "பல அடுக்கு பாதுகாப்புடன் அணுமின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை அனுமதிக்கலாம்' என்று கூறியுள்ளார்.
இவ்வாறு, இளங்கோ கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Inbakkani - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
20-பிப்-201207:29:22 IST Report Abuse
Inbakkani கூடங்குளம் தி்ட்டத்தால் மின்வெட்டுகளை முழுமையாக சரிசெய்துவிட முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X