லண்டன்: உலகின் மிகத் தொன்மையான மாயன் நாகரிகம், சுவடே இல்லாமல் அழிந்தது எப்படி என்பதை, மெக்சிகோ மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில், கி.மு., 2500 முதல் கி.பி., 950 வரை பரவியிருந்தது, மாயன் நாகரிகம். வானியல், கணிதம், கட்டடக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்நாகரிகம், கி.பி., 950களில் சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், கொடும் பஞ்சம், பங்காளிச் சண்டைகள், ஸ்பெயின் நாட்டவரால் கொண்டு வரப்பட்ட அம்மை நோய் என, சில குறிப்பிட்டு பேசப்படுகின்றன. இந்நிலையில், மெக்சிகோவின் அறிவியல் ஆய்வுக்கான யுகடான் மையம் மற்றும் பிரிட்டனை சேர்ந்த சவுதாம்ப்டன் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டும் சேர்ந்து சமீபத்தில், யுகடான் தீபகற்பம் என அழைக்கப்படும் மெக்சிகோவின் தென் பகுதியில் ஆய்வுகளை நடத்தின. இப்பகுதி தான் மாயன் நாகரிகத்தின் மையமாகத் திகழ்ந்த இடம். இங்கு ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் தான், மாயன் நாகரிகத்தின் அழிவிற்கு வித்திட்டது என, இதுவரை விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால், சமீபத்தில் இப்பகுதியில், கி.பி., 800 முதல் கி.பி., 950 வரையிலான காலகட்டத்தில், நீர் நிலைகளில் நிகழ்ந்த ஆவியாதல் குறித்து கணக்கீடுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இப்பகுதியில், ஆண்டுதோறும் பெய்யும் மழையளவில், 25 முதல் 40 சதவீதம் அளவிற்கு மழை வளம் குறைந்ததே, அதாவது மிகச் சிறிய அளவிலான பஞ்சமே, மாயன் நாகரிக அழிவிற்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து, சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் எல்கோ ரோலிங் கூறுகையில், ""இப்பகுதியில் உள்ள திறந்த வெளி நீர் நிலைகளில் அதிகளவு ஆவியாதல் நிகழ்ந்ததால், அதிகளவில் மழை பெய்துள்ளது. அதேநேரம் திறந்த வெளி நீர் நிலைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நீர்ப் பஞ்சம் உருவானது. அதன் விளைவாக, மக்கள் நகரங்களை விட்டுச் செல்ல துவங்கினர்'' என்றார். அதோடு, எங்கெல்லாம் அதிகளவில் நீர் ஆவியாதல் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இதுபோன்று மிகச் சிறிய அளவிலான பஞ்சங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும், அவர் சுட்டிக் காட்டினார்.