பொது செய்தி

தமிழ்நாடு

டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாக செயல்பாடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது

Added : மார் 08, 2012
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் என்பது "உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போன்று' உள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் பார்வதி குற்றஞ்சாட்டினார்.
பள்ளியின் 155வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளில் டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இங்கு படித்த பலர் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை புதுக்கோட்டை டி.இ.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தான் விரும்புவர்.
இங்கு இடம் கிடைக்காவிட்டால் தான் இதர பள்ளிகளுக்கு செல்கின்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அஞ்சுகின்ற நிலை உள்ளது. இங்கு படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய இதுதான் காரணம்.
ஒரு நிர்வாகம் திறன்பட செயல்பட வேண்டுமானால் தலைமை நன்றாக இருக்கவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும். இங்கு தலைமையை ஆசிரியர்கள் மதிப்பதில்லை. ஆசிரியர்களை தலைமை மதிப்பதில்லை.
இங்கு ஐந்தாண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆவதை எதிர்பார்த்து திருமணத்தை கூட தள்ளிப்போடுகின்ற பரிதாப நிலை உள்ளது. சுருங்கச் சொல்வதென்றால் டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு என்பது உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதை போன்று உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.
ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். மாவட்ட கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தவறினால் கல்வித் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டியது வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் பார்வதியின் தடாலடி பேச்சு மற்றும் எச்சரிக்கை பள்ளி ஆசிரியர்களை மட்டுமின்றி விழாவில் கலந்துகொண்ட எம்.பி., குமார் உள்ளிட்ட விருந்தினர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.

புதுகை காட்டுபாவா பள்ளிவாசலில்
சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காட்டுபாவா பள்ளிவாசல் சந்தன உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (8ம் தேதி) இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ளது காட்டுபாவா பள்ளிவாசல். இங்குள்ள செய்யதுபாவா பஹீருதீன் வலியுல்லா பாதுஷாவின் சமாதி அடங்கிய தர்ஹாவில் ஆண்டுதோறும் சந்தன உரூஸ் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை, இரவு நேரங்களில் சிறப்பு தொழுகை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
இதில் மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு சந்தனக்கூடுகள் தர்ஹாவை சுற்றி இழுத்துவரப்படும். முதல் சந்தனக்கூடு இந்துக்களும், இரண்டாவது சந்தனக்கூடை முஸ்லீம்களும் இழுத்து செல்வார்கள்.
சந்தனக்கூடுகள் நிலைக்கு வந்ததும் பாவா பஹீருதீன் சமாதி மீது, சந்தனம் பூசப்பட்டு தொழுகை நடக்கிறது.
இதில், முஸ்லீம்களுடன், இந்துக்களும் கலந்து கொள்கின்றனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக இன்றளவும் காட்டுபாவா பள்ளிவாசல் உரூஸ் விழா நடக்கிறது.
உரூஸ் விழாவில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை காட்டுபாவா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X