புதுடில்லி : 2012--13 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து வகை ரயில் பயண டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் வகுப்பு பயணத்திற்கு கி.மீ.க்கு 2 பைசாவும், சிலிப்பர் பிரிவிற்கு கி.மீ.க்கு 5 பைசா, எக்ஸ்பிரஸ் ரயில், கி.மீ.க்கு 3 பைசா, ஏ.சி. வகுப்பிற்கு 10 பைசா, ஏ.சி. 3 டயர் பிரிவிற்கு 10 பைசா, ஏ.சி. 2 டயருக்கு கி.மீ. 15 பைசா, ஏ.சி. முதல் வகுப்பிற்கு 30 பைசா , பிளாட்பார்ம் டிக்கெட் ரூ. 5 என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்திற்கு 10 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் : மதுரையிலிருந்து கட்ச் குடாவிற்கு வாராந்திர ரயில், பாலக்காட்டிறலிருந்து ஈரோடு, ஷாலிமர் - சென்னை, வாரத்திற்கு 3 முறை இயக்கப்பட உள்ள மன்னார்குடி - திருப்பதி, கோவை- பிகானீர், சென்னை - பெங்களூரு ஏ.சி. டபுள் டக்கர் ரயில், திருச்சி- நெல்லை இன்டர்சிட்டிரயில், சென்னை- பூரி, சென்னை - அசன்சால் உள்ளிட்ட 10 புதிய எக்ஸ்பிரஸ்ரயில்களும், 2 பயணிகள் ரயில்களும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.
லோக்சபாவில் மத்திய ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை ராயபுரத்தில் ரயில் முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா ரயில்வே கிராசிங்கள் அகற்றம் : நாட்டில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கள், இன்னும் 5 ஆண்டுகளில் அகற்றப்படும், ஆளில்லா ரயில்வே கிராசங்களினாலேயே, அதிகளவிலான ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன. முதற்கட்டமாக, ஆளில்லா ரயில்வே கிராசிங்களில், சிறப்பு பயன்பாட்டு வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. வருங்காலத்தில், ரயில் விபத்துகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாகும்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை : பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தன்னிச்சையான பயணிகள் பாதுகாப்பு படை அமைக்கப்பட உள்ளது. இதற்கு கஸ்தூரிரங்கன், அனில் கடோத்கர் இதற்கு தலைமை அதிகாரிகளாக இருப்பர். அதேபோல், ரயில்வே துறையை நவீனமயாக்கும் பொருட்டும், ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு சாம் பிட்ரோடா தலைமை அதிகாரியாக இருப்பார்.
நிதி ஒதுக்கீடு : 12வது ஐந்தாண்டு திட்டத்தில், ரயில்வே திட்ட பணிகளுக்காக ரூ. 7.35 லட்சம் கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் தரத்தில் ஸ்டேசன்கள் : தற்போது புழக்கத்தில் உள்ள ரயில்வே ஸ்டேசன்களை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில்வே ஸ்டேசன்கள், விமானநிலைய தரத்தில் அமைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அதற்கான பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
புறநகர் ரயில் சேவைகள் விரிவு : சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டா நகரங்களில் புறநகர் ரயில்களின் சேவைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது.
1 லட்சம் பேர் நியமனம் : இந்த நிதியாண்டில், ரயில்வே துறையில் புதிதாக 1 லட்சம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி முடக்கத்திற்கான காரணம் : ரயில்வே துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததே, பெரும்பாலான ரயில்வே பணிகள் முடங்கியுள்ளதற்கு காரணம்.
நிதிப்பற்றாக்குறை : இந்த பட்ஜெட்டில், புதிய திட்டங்களுக்காக ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 45 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி தேவைப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்காக 2100 பெட்டிகள் : அகர்தலா-வங்கதேசம் இடையே புதிய ரயில் பாதை
அமைக்கும் திட்டம் உள்ளது; மாற்று திறனாளிகளுக்கு 2100 பெட்டிகள்;
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த கழிவறைகள் அமைக்கப்படும்; கழிவறைகள்
சுத்தமான முறையில் பராமரிக்க புதிய திட்டம்; இதற்காக ரூ.1112 கோடி
ஒதுக்கப்படும்; உலகத்தரம் வாய்ந்த முதல்தர ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்
பா.ஜ. எதிர்ப்பு : ரயில்வே பட்ஜெட்டிற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதாரண மக்களுக்கும் பயன்தரும் வகையில், பட்ஜெட் இருக்கும் என்று அமைச்சர் தினேஷ் திரிவேதி என்று கூறினார். ஆனால், ஏற்கனவே, விலைவாசி உயர்வால் கடும் அவதியுறும் மக்களுக்கு ரயில் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.