கொச்சி : கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது, தேச துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து புத்தகங்களும், துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன.
கேரள மாநிலம், தொடுபுழா நியுமேன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் என்பவரது வலதுகையை வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் முக்கிய அமைப்பைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவ்வமைப்பைச் சேர்ந்த ரனீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சர்ப்ராஸ் நவாஸ் என்பவர் எழுதிய ஜிகாத் என்ற புத்தகம் சிக்கியது. மேலும், இது தொடர்பான துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவர் மீதும், நவுஷாத் என்பவர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் பெங்களூரில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய சர்ப்ராஸ் நவாஸ் தான் இப்புத்தகத்தை எழுதியவராகவும் இருக்குமோ என போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய சம்பவத்தில், ஆலுவா பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநில போலீசார் தயாரித்த விரிவான அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.